/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் 'தவம்' மருத்துவர்கள் பற்றாக்குறை: கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்
/
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் 'தவம்' மருத்துவர்கள் பற்றாக்குறை: கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் 'தவம்' மருத்துவர்கள் பற்றாக்குறை: கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்
மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆம்புலன்ஸ்கள் 'தவம்' மருத்துவர்கள் பற்றாக்குறை: கோவைக்கு அனுப்பப்படும் நோயாளிகள்
ADDED : பிப் 16, 2025 02:41 AM

திருப்பூர்: திருப்பூரில் இருந்து கோவைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்ல, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ்கள், 24 மணி நேரமும் காத்திருக்கின்றன. டாக்டர்கள் பற்றாக்குறையால், கோவைக்கு நோயாளிகளை அழைத்து செல்வது தொடர்கிறது.
திருப்பூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், எட்டு 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் நான்கு முதல் ஆறு ஆம்புலன்ஸ்கள் கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்கின்றன.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையாக நான்கு ஆண்டுகளுக்கு முன் தரம் உயர்த்தப்பட்டது. 100 மாணவர்கள் எம்.பி.பி.எஸ்., மருத்துவம் படித்து வருகின்றனர். அரசு மருத்துவக் கல்லுாரியில் சீனியர் டாக்டர்கள், ஒவ்வொரு பிரிவுக்கான சிறப்பு நிபுணர்கள் என, 79 டாக்டர்கள் பணியில் உள்ளனர். இது தவிர, ஜூனியர் டாக் டர், 47 பேர் உள்ளனர்.
இவ்வாறு நுாற்றுக்கணக்கான டாக்டர்கள் இருந்த போதும், புறநோயாளிகள் பிரிவுக்கு, 3 ஆயிரம் பேர் தினசரி வருவதால்,மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரை எழுதும் பணி பெரும் சவாலாக உள்ளது.
தினமும், 30 கர்ப்பிணிகள் அனுமதியாகின்றனர். உள்நோயாளிகள், 110 பேர் வரை அனுமதியாகின்றனர். பிரசவத்துக்கான ஆபரேஷன் மற்றும் பிற நோய் வகையில், 25- 35 அறுவை சிகிச்சை செய்ய வேண்டியுள்ளது.
கோவைக்குபரிந்துரைப்பது ஏன்?
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் இருதய டாக்டர், நரம்பியல் சிறப்பு மருத்துவர், சிறுநீரக பிரிவுக்கு ஐந்துக்கும் குறைவான டாக்டர்களே உள்ளனர். உள்நோயாளிகளாக உள்ளவர்களை கவனிக்க போதிய டாக்டர் இல்லாத நிலையில், வெளியில் இருந்து நோயாளிகள் அனுமதியாக வருகின்றனர்.
குறிப்பாக, விபத்தின் போது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, திடீர் நெஞ்சுவலி காரணமாக மயங்கி விழுந்து, உடனடியாக உயிர்காக்கும் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையில் தினசரி பத்து பேர் வருவதால், அவர்களை உடனடியாக கோவைக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதற்காக, மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், எட்டு, 108 ஆம்புலன்ஸ்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது.
பகலை விட இரவில் தான் அதிக நோயாளிகள் வருவதால் முன்னெச்சரிக்கையாக இவ்வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், நோயாளிகள் யாரும் அவசர சிகிச்சைக்கு அனுமதியாகவில்லையெனில், இரவு முழுதும், மறுநாள் விடியும் வரை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தவமாய் தவமிருக்க வேண்டியுள்ளது.கருத்துருக்கள் அனுப்பபட்டுள்ளது
அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை 'டீன்' முருகேசன் கூறியதாவது:
தற்போதுள்ள சிறப்பு நிபுணர், சீனியர் டாக்டர் குழுவை கொண்டு உயிர்காக்கும் அனைத்து ஆரம்ப கட்ட சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு மேல் உயர் சிகிச்சை தேவை எனும் போது தான் கோவைக்கு நோயாளிகளை அனுப்பி வைக்கிறோம்.
முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவ கல்லுாரி வளாகத்தில், 108 ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கமானது தான். கூடுதல் டாக்டர்களை நியமிக்க கேட்டு கருத்துரு அனுப்பபட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.