/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருக்கல்யாண கோலத்தில் அம்மையப்பர்
/
திருக்கல்யாண கோலத்தில் அம்மையப்பர்
ADDED : ஜூன் 09, 2025 12:42 AM
திருப்பூர்; வைகாசி விசாக தேர்த்திருவிழாவில் நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது; உற்சவமூர்த்திகள் மணக்கோலத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா விமரிசையாக நடந்து வருகிறது. கொடியேற்றம், தினமும் வாகன காட்சி கட்டளை பூஜைகள் நடந்தது.
பஞ்சமூர்த்திகள் புறப்பாட்டை தொடர்ந்து, நேற்று திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், சோமாஸ்கந்தர் மற்றும் விசாலாட்சியம்மனுக்கு, மகா அபிேஷகம் மற்றும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள் சரடு, பூ பிரசாதமாக வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாலை 6:00 மணிக்கு, வெள்ளை யானை வாகனத்தில் சோமாஸ்கந்தரும், விசாலாட்சியம்மன் பல்லக்கு சேவையில் அருள்பாலித்தனர். ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள், அனுமந்தராய வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.
முன்னதாக, கன்னட தேவாங்க சமூக அறக்கட்டளை சார்பில், சுவாமிகளுக்கான பட்டு வஸ்திரங்கள், கமல விநாயகர் கோவிலில் இருந்து எடுத்து வந்து சமர்ப்பிக்கப்பட்டது.
இன்று காலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள், விநாயகர், சூலதேவர் மற்றும் சண்டிகேஸ்வரர், சோமாஸ்கந்தர் மற்றும் ஸ்ரீதேவி பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் உற்சவமூர்த்திகள், சிறப்பு அலங்காரத்துடன் தேரில் எழுந்தருளினர்.
மாலை, 3:30 மணிக்கு, சிறப்பு வழிபாடுடன் தேரோட்டம் துவங்குகிறது. நான்கு ரதவீதிகளை வலம் வந்து, நிலையை அடையும். தொடர்ந்து, பிரேதாஷ வழிபாட்டு குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட உள்ளது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் சிவனடியார் திருக்கூட்டம் சார்பில், பனிரெண்டார் திருமண மண்டபத்தில், சிவவழிபாடும், மகேஸ்வர பூஜையும், அன்னம்பாலிப்பும் நடைபெற உள்ளது.