/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேங்காய்க்கு விலையை குறைக்க செயற்கை முயற்சி?
/
தேங்காய்க்கு விலையை குறைக்க செயற்கை முயற்சி?
ADDED : செப் 29, 2024 01:57 AM
திருப்பூர்: 'ஏறுமுகத்தில் செல்லும் தேங்காய் விலையேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடும் முயற்சி நடக்கிறது' என, தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் தெரிவித்துள்ளது.
தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்க (நாம்) மாநில தலைவர் பிரபுராஜா கூறியதாவது:
கடந்த மூன்றாண்டாக தேங்காய் விலை வீழ்ச்சியால், கடும்நிதி நெருக்கடியை சந்தித்து வந்த விவசாயிகள், தென்னந்தோப்பு பராமரிப்பை கூட நிறுத்திய நிலையில், தற்போதைய தேங்காய் விலையேற்றத்தால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்; தோட்ட பராமரிப்பிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இறக்குமதி எண்ணெய்களுக்கு கூடுதல் வரி விதித்து, உள்நாட்டு உற்பத்தியாளர்களை பாதுகாக்க வேண்டும் என்ற நம் சங்கத்தின் கோரிக்கையும், அதன் விளைவாக மத்திய அரசு எடுத்த நடவடிக்கையும் தான் இதற்கு முக்கிய காரணம்.
இம்மாத (செப்.,) இரண்டாவது வாரத்தில் இருந்து, 26ம் தேதி வரை, கொப்பரை தேங்காய் விலை, தினசரி ஏற்றம் கண்டு வருகிறது. இந்த விலையேற்றத்தை விவசாயிகள் பலரும் தெரிந்துகொள்ளாமல் உள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட பெரு நிறுவனங்கள், சந்தை விலையை மறைத்து, கொள்ளை லாபம் சம்பாதித்து வருகின்றன. எனவே, தினசரி சந்தை நிலவரம் குறித்து விவசாயிகளுக்கு தெரியப்படுத்தி வருகிறோம்.
இதற்கிடையில், பெரு, நடுத்தர நிறுவனங்கள், தேங்காய் விலையை செயற்கையாக குறைத்து, கொள்ளை லாபம் பார்க்க முற்படுகின்றன; இதனை கண்டிக்கிறோம். இவர்களுக்குள் 'சிண்டிகேட்' அமைத்து, தேங்காய் பருப்பு விலை குறைந்து வருவது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர்.
விலை குறையாது...
-----------------
தென்னையில் பலவித நோய் தாக்குதல், பருவநிலை மாற்றம், உற்பத்தி சரிவு போன்ற பல காரணங்களால் சாகுபடி குறைந்தது; அதே நேரம் தேவை அதிகரித்திருக்கிறது. அதோடு, மத்திய அரசின் இறக்குமதி வரி உயர்வால், தேங்காய், நிலக்கடலை, எள், ஆமணக்கு போன்ற விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திருக்கிறது.
அடுத்த மாத (அக்.,) துவக்கத்தில் இருந்தே கர்நாடகாவில் தசரா; தமிழகத்தில் நவராத்திரி, சரஸ்வதி, ஆயுத பூஜை, விஜயதசமி; மேற்கு வங்கத்தில் காளி பூஜை மற்றும் நாடு முழுக்க தீபாவளி என பண்டிகைகள் வரவுள்ளன; இதனால், தேங்காய்க்கான தேவை அதிகரிக்கும்; அதனால், விலை கூடுமே தவிர குறையாது. எனவே, விவசாயிகள், விலை குறையும் என பயந்து, விளை பொருட்களை குறைந்த விலைக்கு விற்று விட வேண்டாம்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.