/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டலுக்கு ரொக்க பரிசுடன் காத்திருக்குது விருது
/
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டலுக்கு ரொக்க பரிசுடன் காத்திருக்குது விருது
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டலுக்கு ரொக்க பரிசுடன் காத்திருக்குது விருது
பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டலுக்கு ரொக்க பரிசுடன் காத்திருக்குது விருது
ADDED : ஆக 03, 2025 09:08 PM
உடுமலை; திருப்பூர் மாவட்டத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை பயன்படுத்தும் உணவு நிறுவனங்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே கூறியிருப்பதாவது:
உணவு பரிமாறவும், பார்சல் செய்வதற்கும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
பெரியவகை உணவகங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாயுடன் கூடிய விருதும், ரோட்டோர சிறு வணிகர்களுக்கு, 50 ஆயிரம் ரூபாயுடன் கூடிய விருதும் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ள உணவகத்தினர், வரும் ஆக., மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பதாரர், உணவு பாதுகாப்புத்துறையின் உரிமம், பதிவுச்சான்றிதழ் பெற்று, அது நடப்பில் இருக்கவேண்டும். உணவகத்தில் பணிபுரியும் ஒரு நபராவது, உணவு பாதுகாப்பு பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
அனைத்து பணியாளர்களுக்கும், தொற்றுநோய் தாக்கமற்றவர்கள் என்பதற்கான மருத்துவ சான்றிதழ் அவசியம் இருக்கவேண்டும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் வாயிலாக, சுகாதார தணிக்கை, ஆபத்துள்ள உணவு வணிக வகைக்கான தணிக்கை மேற்கொண்டு, மதிப்பீட்டு சான்று பெற்றிருக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்டத்தில், ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கவர்களை தவிர்த்து, மக்கும் தன்மையுள்ள பொட்டலமிடும் பொருட்களை பயன்படுத்தும் உணவு நிறுவனங்கள், விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, கலெக்டர் அலுவலக நான்காவது தளம், அறை எண்: 428ல் செயல்படும் உணவு பாதுகாப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.