திருப்பூர்: முட்டை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சில்லறையில் ஏழு ரூபாய் வரை விற்கப்படுகிறது.
திருப்பூருக்கு தேவையான முட்டைகள், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளில் இருந்து பெறப்படுகின்றன. நேற்று, திருப்பூரில் ஒரு அட்டை முட்டை (30 முட்டை) 186 ரூபாய்க்கும், மொத்த விலையில் ஒரு முட்டை, 6 ரூபாய் 20 பைசாவுக்கும், மளிகை கடை, சில்லறை விற்பனை கடைகளில், ஏழு ரூபாய் வரையும்விற்கப்படுகிறது.
திருப்பூரில் முட்டை விலை உயர்ந்தபோதும், விற்பனை குறையவில்லை. வழக்கமாக சபரிமலை சீசன் நேரத்தில் விற்பனை குறையும்; நடப்பாண்டு அப்படியொரு நிலை இல்லை.
திருப்பூர் முட்டை வியாபாரிகள் கூறியதாவது:
வழக்கமான அளவை விட முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. அதே நேரம், நாமக்கல்லில் இருந்து வடமாநிலங்களுக்கு அதிகளவில் முட்டை அனுப்பப்படுகிறது. அங்கு கடும் குளிர் நிலவுவதால், முட்டை விரைவாக விற்றுத்தீர்ந்து விடுகிறது.
கிறிஸ்துமஸ், புத்தாண்டு கேக் தயாரிப்புக்கு முன்கூட்டியே முட்டையை வாங்கி பலர் இருப்பு வைக்கின்றனர். முட்டைக்கு தட்டுப்பாடு ஏற்படுவதால், உள்ளூரில் விலை உயர்கிறது. கடந்தாண்டு ஒரு முட்டை, 7 ரூபாய் 50 பைசா வரை விற்கப்பட்டது. நடப்பாண்டு ஒரு முட்டை எட்டு ரூபாய் வரை விற்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு, அவர்கள் கூறினார்.
ஆம்லெட் விலையும் உயர்வு
பெரிய வெங்காயம் விலையை தொடர்ந்து, முட்டை விலையும் உயர்ந்து வருவதால், ஓட்டல்களில் ஆம்லெட் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெரும்பாலான கடைகளில் ஆம்லெட், 15 ரூபாய்க்கு விற்கும் நிலையில், குறிப்பிட்ட சில பகுதிகளில் ஆம்லெட், 20 ரூபாயாகியுள்ளது. இக்கடைகளில், முட்டை, வெங்காயம் விலை குறையும் போது, ஆம்லெட் விலை குறைக்க வேண்டும் என்பது வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பு.