/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம்! அதிகாலை குளிரிலும் பக்தர்கள் பரவசம் 32 திரவியங்களால் குளிர்ந்த எம்பெருமான்
/
ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம்! அதிகாலை குளிரிலும் பக்தர்கள் பரவசம் 32 திரவியங்களால் குளிர்ந்த எம்பெருமான்
ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம்! அதிகாலை குளிரிலும் பக்தர்கள் பரவசம் 32 திரவியங்களால் குளிர்ந்த எம்பெருமான்
ஆடல் வல்லானுக்கு ஆனந்த அபிேஷகம்! அதிகாலை குளிரிலும் பக்தர்கள் பரவசம் 32 திரவியங்களால் குளிர்ந்த எம்பெருமான்
ADDED : ஜன 14, 2025 06:50 AM

அவிநாசி; வேத விற்பன்னர்கள் நான்கு வேதங்களையும் பாராயணம் செய்ய, ஓதுவாமூர்த்திகள் திரும்வெம்பாவை ஓத, 'ஓம் நமசிவாய' என பக்தர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்ய எல்லாம்வல்ல எம்பெருமான் நடராஜருக்கு ஆருத்ரா மஹா தரிசன விழா, சிவாலயங்களில் கோலாகலமாக நடைபெற்றது.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த 4ம் தேதி ஸ்ரீ மாணிக்கவாசகப் பெருமான் திருவாதிரை நாச்சியார் காப்பு கட்டுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 3:00 மணி முதல் நடராஜப் பெருமான் மற்றும் சிவகாமி அம்பாளுக்கு விபூதி, சந்தனாதி தைலம், வெண்ணெய், பஞ்சகவ்யம், நெல்லிப் பொடி, திருமஞ்சனம், மஞ்சள் பொடி, வில்வ பொடி, பஞ்சாமிர்தம், மாதுளை, ஆரஞ்சு, கொய்யா, சப்போட்டா பழச்சாறுகள் உள்ளிட்ட 32 திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.
அதன்பின், கோவில் வளாகத்தில் உள்ள அரச மரத்தடி விநாயகரை, பட்டி சுற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து அம்மையப்பர் ரத வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த நிகழ்ச்சியும் நடைபெற்றது. முன்னதாக, அதிகாலை நேரத்தில், கொட்டும் பனியையும் பொறுப்பெடுத்தாமல் பெண்கள், குழந்தைகள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு எம்பெருமானை வழிபட்டனர். பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.
திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணி முதல் ஸ்ரீ சிவகாமி அம்மையார் சமேத ஸ்ரீ நடராஜ பெருமானுக்கு பல்வேறு திரவியங்களில் அபிஷேகம் நடைபெற்றது வேத பாராயணத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
அவிநாசி அருகே சேவூரில் எழுந்தருளியுள்ள அறம் வளர்த்த நாயகி உடனமர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோவிலிலும் நேற்று ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. முன்னதாக மகாபிேஷகம் செய்விக்கப்பட்டு, அம்மையப்பருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின், சுவாமி திருவீதியுலா காட்சி நடைபெற்றது. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.