/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கன்வாடி புதுப்பிப்பு கரம் கொடுத்தது வங்கி
/
அங்கன்வாடி புதுப்பிப்பு கரம் கொடுத்தது வங்கி
ADDED : பிப் 22, 2024 11:56 PM

திருப்பூர்:திருப்பூரில் உள்ள அங்கன்வாடி மையங்களில் பெரும்பாலானவை பழுதடைந்த நிலையில் உள்ளன. மாநகராட்சி கூட்டங்களின் போது, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேயர் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று கோடாக் மஹிந்திரா வங்கி அங்கன்வாடி மையங்களை புதுப்பிக்க முன் வந்தது. அதன் சமூக பங்களிப்பு நிதி மூலம் இந்த நிதியாண்டில் 50 லட்சம் ரூபாய் நிதியை வங்கி வழங்கியுள்ளது. பத்து அங்கன்வாடி மையங்கள் புதுப்பிக்கும் பணி நேற்று பூமி பூஜையுடன் துவங்கியது; 50வது வார்டு அண்ணா நகர் அங்கன்வாடி மையத்தில் துவக்க விழா நேற்று நடந்தது.
மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். கோடாக் மஹிந்திரா வங்கியின் மண்டல மேலாளர் வெங்கட சுப்ரமணியம், ஏரியா மேலாளர் மெய்ஞ்ஞானமூர்த்தி, திருப்பூர் - கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் பாபு, மண்டல உதவி கமிஷனர் வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் கூறுகையில், 'அடுத்த நிதியாண்டில் மேலும் 10 மையங்கள் புதுப்பிக்க 50 லட்சம் ரூபாய் நிதி வழங்க உறுதியளித்துள்ளது' என்றார்.
தற்போது, புதுப்பிக்கப்படும் மையங்கள் விவரம்: வீரபாண்டி மையம் - 2; அனுப்பர்பாளையம், முருகம்பாளையம் மையம் - 1; 15 வேலம்பாளையம்; அனுப்பர்பாளையம் புதுார் மையம், மாரியம்மன் கோவில் மையம், ஒன்றிய துவக்க பள்ளி வளாக மையம், கே.என்.பி., காலனி மையம், குமரப்பபுரம் மற்றும் அண்ணா நகர்.