/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு; மானிய திட்டம் அறிவிப்பு
/
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு; மானிய திட்டம் அறிவிப்பு
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு; மானிய திட்டம் அறிவிப்பு
தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்பாடு; மானிய திட்டம் அறிவிப்பு
ADDED : அக் 27, 2025 09:53 PM
உடுமலை: தோட்டக்கலைத்துறை சார்பில், ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மானிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் வட்டார தோட்டக்கலை துறை அலுவலகத்தை அணுகலாம்.
உடுமலை வட்டாரத்தில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இச்சாகுபடியில் ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ தாக்குதல் முக்கிய பிரச்னையாக உள்ளது.
இத்தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் மானிய திட்டம் குறித்து, அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
ஒருங்கிணைந்த மேலாண்மை விளக்கு பொறியை ஏக்கருக்கு, 2 வீதம் இரவில் 7 மணி முதல் 11 மணி வரை வைத்து வெள்ளை ஈக்களை கண்காணித்தும் கவர்ந்தும் அழிக்கலாம்.
மஞ்சள் நிற ஒட்டும் பொறிகள் ஏக்கருக்கு, 10 வீதம் 6 அடி உயரத்தில் தொங்கவிட்டும் மரத்தின் தண்டு பகுதியைச் சுற்றி கட்டி, ஈக்களின் நடமாட்டத்தை கண்காணித்தும் கவர்ந்தும் அழிக்கலாம்.
விசைத் தெளிப்பானைக்கொண்டு, மிக வேகமாக தண்ணீரை பீய்ச்சி தெளிப்பதால், ஈக்களின் எண்ணிக்கை பெருகுவதை குறைக்கலாம்.
என்கார்சியா ஒட்டுண்ணி குளவியை ஏக்கருக்கு, 10 இலை துண்டுகள் வீதம் தாக்கப்பட்ட ஒலைகளின் மீது வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
கண்ணாடி இறக்கை பூச்சி இரைவிழுங்கி முட்டைகளை, ஏக்கருக்கு, 400 வீதம் தாக்கப்பட்ட மரங்களில் வைத்தும் கட்டுப்படுத்தலாம்.
கரும்பூசணத்தை கட்டுப்படுத்த, மைதா மாவு பசை கரைசலை, ஒரு லிட்டர் தண்ணீரில், 25 கிராம் வீதம் கலந்து தெளிக்கலாம். ரசாயன பூச்சிக்கொல்லிகள், இயற்கை எதிர் உயிர் பூச்சிகளை அழித்துவிடுவதால், அவற்றை பயன்படுத்தவே கூடாது.
மானிய விபரம் தென்னையில் வெள்ளை ஈ கட்டுப்படுத்துவதற்காக, தமிழக அரசு தோட்டக்கலைத்துறை வாயிலாக, மஞ்சள் பாலீத்தின் ஷீட் மற்றும் ஒட்டுண்ணி முட்டைகள், 100 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
சிட்டா, அடங்கல் நகல், ஆதார் நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு ஆகியவற்றுடன் உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
வட்டார தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் கலாமணி கூறுகையில், ''மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கு மானியம் வழங்கப்படுகிறது. உடுமலை வட்டாரத்தில், 4,900 ஹெக்டேர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 ஏக்கர் வரை மானிய பொருட்கள் வழங்கப்படும்'', என்றார்.

