/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளிகளில் ஆண்டு விழா; கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
/
பள்ளிகளில் ஆண்டு விழா; கலை நிகழ்ச்சிகள் அசத்தல்
ADDED : பிப் 16, 2024 11:39 PM

- நிருபர் குழு -
உடுமலை பூலாங்கிணர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தலைமையாசிரியர் விமலா தலைமை வகித்தார். ஆசிரியர் சுதா வரவேற்றார். சடையகவுண்டன்புதுார் அரசு பள்ளி தலைமையாசிரியர் தங்கவேலு முன்னிலை வகித்தார்.
சர்க்கார்புதுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தாரணி, மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
தொடர்ந்து கிருஷ்ணன் லீலா நடனம், பரத நாட்டியம், மொபைல்போன் தீமை குறித்த விழிப்புணர்வு நாடகம், பறை இசை, உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.
ஆண்டு விழாவையொட்டி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி, மாறுவேடம், ஓவியப்போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள் பரிசுகளை வழங்கினர். அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் சரவணன் நன்றி தெரிவித்தார்.
* குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் வென்மலர் தலைமை வகித்தார். முன்னாள் பேரூராட்சி தலைவர் மாரியப்பன், சங்கராமநல்லுார் பேரூராட்சி தலைவர் மல்லிகா, துணைத்தலைவர் பிரேமலதா, பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் தாமோதரன், மேலாண்மைக்குழு தலைவர் கன்னிஸ்வரி முன்னிலை வகித்தனர்.
மாணவர்களின் கிராமிய நடனம், நாடகம், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்தன. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள், பெற்றோர், பொதுமக்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே, வெள்ளாளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், 75ம் ஆண்டு விழா நடந்தது. வட்டார கல்வி அலுவலர் வெள்ளிங்கிரி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ரஷ்யா பீபி வரவேற்றார்.
பள்ளி வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும், ஊராட்சி தலைவர் பத்மபிரியாவுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து, தாமரை மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விருது வழங்கப்பட்டது. அக்குழுவினர், பள்ளிக்கு கடிகாரம் மற்றும் மாணவர்களுக்கு திருக்குறள் அகராதி வழங்கினர்.
விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, தனியார் நிறுவனத்தினர் விருதுகளை வழங்கினர். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மேலாண்மை குழு தலைவர் அம்சவேணி, உறுப்பினர்கள், பெற்றோர் பங்கேற்றனர். ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.
கிணத்துக்கடவு
மெட்டுவாவி, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. விழாவில், கிணத்துக்கடவு வட்டார கல்வி அலுவலர்கள் எடிசன் பெர்னாட் மற்றும் மகேஸ்வரன், ஊராட்சி தலைவர் பூவதி, பள்ளி தலைமை ஆசிரியை மயிலாத்தாள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விழாவில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில், கிராமிய நடனம், நாடகம், பாடல் போன்றவைகளில் பள்ளி மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்தனர்.
* நெகமம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், ஆண்டு விழா நடந்தது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர் கோமதி அனைவரையும் வரவேற்றார். நெகமம் பேரூராட்சி தலைவர் ஆர்த்தி தலைமை வகித்தார். தொடர்ந்து மாணவர்கள் கலை நிகழ்ச்சி நடந்தது. அதன்பின், சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பங்கேற்றனர்.