UPDATED : நவ 24, 2026 03:02 PM
ADDED : நவ 24, 2026 03:00 PM

பல்லடம்: கரைப்புதுாரைத் தொடர்ந்து, பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியிலும் குப்பைகளால் மலைக்குன்று உருவாகி வருகிறது.
பல்லடம் ஒன்றியத்தில் பருவாய், பணிக்கம்பட்டி கிராமங்களைத் துாய்மையான கிராமங்களாக மாற்ற மாவட்ட நிர்வாகம் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, அதிக மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார், ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சிகளில் குப்பைப் பிரச்சினை தீவிரமடைந்துள்ளது.
ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கரைப்புதுார் ஊராட்சியிலும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சியிலும் ஏராளமான தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதனால் குப்பைகள் அதிகளவில் சேகரமாகின்றன. கரைப்புதுார் ஊராட்சியில் ஏற்கனவே குப்பைகளால் உருவான மலைக்குன்று பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
தற்போது ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி அறிவொளி நகர் பகுதியில் திறந்தவெளியில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் குப்பைக் குவியலின் பரப்பளவு அதிகரித்து வருவதால், சுகாதாரப் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
அதிக வருவாய் கொண்ட பெரிய ஊராட்சிகளில்கூட குப்பைகளை அகற்ற நிரந்தரத் தீர்வு காணப்படவில்லை என பொதுமக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அதிக குப்பைகள் சேகரமாகும் ஊராட்சிகளில், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளைப் போன்று குப்பைகளைத் தரம் பிரிக்கும் கிடங்குகள் அமைக்க வேண்டும். இல்லையெனில், மாவட்ட நிர்வாகத்தின் துாய்மை கிராமம் திட்டத்தின் நோக்கம் கேள்விக்குறியாகும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
