ADDED : அக் 25, 2024 10:48 PM

திருப்பூர்: தமிழக ஜவுளி செயலர் லலிதா, வீரபாண்டி பொது சுத்திகரிப்பு மையத்தில், சாயக்கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புகளை பார்வையிட்டார்.
பெத்திசெட்டிபுரத்தில் உள்ள சாய ஆலை உரிமையாளர்கள் சங்க அரங்கில், சங்க தலைவர் காந்திராஜன் தலைமையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடினார்.
அவரிடம், சாய ஆலை சங்கம் சார்பில் ஜவுளி செயலரிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள்:
திருப்பூரில் இயங்கும் சாயக்கழிவுநீர் பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் வழங்கிய வட்டியில்லா கடனை, மானியமாக மாற்ற வேண்டும். மத்திய அரசின்ஏ-டப் திட்டம், இரண்டு ஆண்டாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழக அரசு, ஜவுளி கொள்கை மூலம், இயந்திரங்களுக்கு 25 சதவீதம் முதலீட்டு மானியம் வழங்க வேண்டும்.
சுத்திகரிப்பு மையங்களில் தேங்கியுள்ள கலவை உப்பு கழிவுகளை அகற்ற தேவையான வழிமுறைகளை கண்டுபிடிக்க வேண்டும். சுத்திகரிப்பு மையங்களின் மொத்த சுத்திகரிப்பு செலவினத்தில் 40 சதவீதம் மின் கட்டணத்துக்காக செலவிடவேண்டியுள்ளது. சோலார் மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுவதற்காக, 85 சதவீதம் மானியம் வழங்கவேண்டும்.
கோரிக்கைகளை கேட்டறிந்த செயலர், அவற்றை நிறைவேற்றி தருவதாக உறுதி அளித்தார்.