/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம்
/
மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் நியமனம்
ADDED : அக் 29, 2025 12:49 AM
திருப்பூர்: அறநிலையத்துறை சார்பில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலரை நியமிக்க ஏதுவாக, ஐந்து பேர் கொண்ட மாவட்ட குழு அரசால் நியமிக்கப்பட்டுள்ளது.
ஹிந்து அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள கோவில்களுக்கு, தனிநபர், மூன்று பேர் மற்றும் ஐந்து பேர் கொண்ட அறங்காவலர் குழு நியமனம் செய்யப்படுகிறது. விண்ணப்பம் பெற்று, தகுதியான நபர்களை நியமனம் செய்ய ஏதுவாக, ஐந்து பேர் கொண்ட மாவட்ட குழு அரசால் நியமனம் செய்யப்படுகிறது.
கோவில் வாரியாக அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பம் பெற்று, தகுதியான நபர்களை, கோவில் அறங்காவலராக நியமிக்கின்றனர்; உறுப்பினர் அளவில் தேர்தல் நடத்தி, அவர்களில் இருந்து ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
திருப்பூர் மாவட்டத்தில், கடந்த பிப்., மாதத்துடன் மாவட்ட குழுவின் பதவிக்காலம் முடிந்தது. அதன்பின், அறங்காவலர் நியமன பணி முடங்கியது. புதிய மாவட்ட குழுவை நியமனம் செய்ய அறிவிப்பு செய்து, மாவட்ட அளவில், 16 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்நிலையில், ஐந்து நபர்கள் கொண்ட மாவட்ட குழு அமைத்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
உடுமலையை சேர்ந்த சாமி, திருப்பூர் பெரியாண்டிபாளையத்தை சேர்ந்த கலைச்செல்வி, கொங்கு நகரை சேர்ந்த முத்துராமன், ராயபுரத்தை சேர்ந்த கலாமணி, இச்சிப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியம் ஆகியோர், மாவட்ட குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர். ஐந்து உறுப்பினர்களில் இருந்து, சுப்பிரமணியத்தை தலைவராகவும் நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மாவட்ட குழு, விரைவில் பொறுப்பேற்கும். இக்குழு இரண்டு ஆண்டுகளுக்கு மாவட்ட குழு பொறுப்பில் இருக்கும் என, ஹிந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

