/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கொழுமம் வனத்தில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வு நடுவம் பதிவு
/
கொழுமம் வனத்தில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வு நடுவம் பதிவு
கொழுமம் வனத்தில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வு நடுவம் பதிவு
கொழுமம் வனத்தில் தொல்லியல் சான்றுகள் வரலாற்று ஆய்வு நடுவம் பதிவு
ADDED : மே 04, 2025 10:05 PM

உடுமலை, ; உடுமலை, கொழுமம் வனப்பகுதியில், ஆயிரம் ஆண்டு பழமையான பெருங்கற்காலத்து சிற்பங்கள், நடுகற்களை உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் கண்டறிந்துள்ளனர்.
மத்திய தொல்லியல் துறை (ஓய்வு) தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி மற்றும் உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தை சேர்ந்த சிவகுமார், அருள்செல்வன், பாலகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர், மேற்கு தொடர்ச்சிமலைப்பகுதியிலுள்ள, கொழுமம் வனப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
தொல்லியல் ஆய்வறிஞர் மூர்த்தீஸ்வரி கூறியதாவது:
மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள கொழுமம் பகுதியில், வள்ளல் குமணனைப் பற்றி உடுமலை வரலாற்று ஆய்வு நடுவத்தினர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே, குமண மன்னன் புலவர்களுக்கு நிலம் கொடுத்த கல்வெட்டு, புறநாற்று பாடல்கள் வாயிலாக ஆவணப்படுதத்தப்பட்டது. அதே போல், இப்பகுதிகளில், 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்திட்டைகள், கருப்பு, சிவப்பு ஓடுகள், அமராவதி ஆற்றங்கரைகளில் இருக்கும் தொல்லியல் சின்னங்கள் குறித்து தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கொழுமம் அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள தன்னாசியப்பன் கோயிலுக்குச் செல்லும் வழியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பெருங்கற்காலத்துச் சின்னங்களும், நடுகற்களும் கண்டறியப்பட்டது.
இங்கு, பக்தி மிகுந்திருந்ததை குறிக்கும் வகையில், மூன்று அடி உயரம் உள்ள கற்சிலையும், ஒரு கையில் கற்கோடரியுடன் கூடிய சிற்பமும், அதற்கு அருகில், இரண்டு அடி உயரத்தில் அய்யனார் வடிவில் தாடியுடன் இருக்கும் கற்சிலையும், ஒன்றரை அடி உயரம் உள்ள ஒரு இரும்பு பூன் பொருத்திய மரக்குச்சியும் காணப்பட்டது. இப்பகுதி மக்களால் இன்றளவும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
மேலும், இங்கு காணப்பட்ட நடுகற்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும். இங்கு வழிபாட்டில் இருக்கும் சப்தகன்னிமார் சிலைகள், நீர் நிலைகளுக்கு அருகிலும், மலைப்பாங்கான இடங்களிலும் காணப்படுகிறது.
வனத்தில் இருக்கும் மரங்கள் புறநானூற்றுப் பாடல்களில் பெருஞ்சித்திரனார் குறிப்பிடுவதை போன்று, கமுகு மரங்களும், மூங்கில் மரங்களும், மருத மரங்களும் செழித்தோங்கி உயர்ந்து காணப்படுகிறது.
மேலும், இரண்டடி உயரத்தில், இரண்டடி அகலத்தில் குதிரையும் கற்சிலையாக நிறுத்தப்பட்டுள்ளது. குதிரை ஆறு, அஸ்வ நதி என்பதை இக்குதிரை சிற்பம் உறுதி செய்கிறது.
நீர் நிலைகளுக்கு அருகில், நடுகற்கள் இருப்பதாலும், குவணச்சேரி எனும் பாண்டிய ராஜா மடத்திற்கு அருகில் இந்த நடுகற்கள் இருப்பதும், வலசு கருப்பணசாமி, வேட்டைக்காரசாமி எனவும், எல்லைக் காவல் தெய்வமாகவும் மக்கள் வழிபடுவதிலிருந்து, இது மூத்தோர் வழிபாடு என உறுதி செய்யப்படுகிறது.
இவ்வாறு, தெரிவித்தார்.