வாக்குறுதிகள் உறுதியானவையா? பகுப்பாய்வு அவசியம்!
வாக்குறுதிகள் உறுதியானவையா? பகுப்பாய்வு அவசியம்!
ADDED : ஏப் 21, 2026 10:04 PM
திருப்பூர்: தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அள்ளிவீசும் வாக்குறுதிகள் எந்தளவுக்கு சாத்தியமானவை என்பதை வாக்காளர்கள் ஆழமாகச் சிந்தித்து பார்க்க வேண்டும் என அரசியல் ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.முன்பெல்லாம் கட்சிச் சின்னங்களே வாக்காளர்களின் முதன்மைத் தேர்வாக இருந்தன. ஆனால், இன்றைய தலைமுறை கல்வியறிவு பெற்று, ஜனநாயகக் கடமையில் தீவிரமாக பங்கேற்று வருகிறது.
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் வரும் செய்திகளை ஒப்பிட்டுப் பார்த்து விமர்சிக்கும் ஆரோக்கியமான அரசியலை நோக்கி இளைய சமுதாயம் நகர்வதையே இந்தத் தேர்தலில் பதிவான அதிகப்படியான இளம் வாக்காளர்களின் வாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், மாநில அளவிலான அவரவர் கட்சிகளின் வாக்குறுதிகளுடன் நின்றுவிடாமல், மாவட்ட வாரியாக உள்ள உள்ளூர் பிரச்னைகளை பட்டியலிட்டு வாக்குறுதி அளித்திருப்பது, அவர்களின் பிரசாரத்துக்கு பலன் கிடைக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அரசியல் கட்சிகள் தரும் வாக்குறுதிகள் வெறும் கவர்ச்சித் திட்டங்களா அல்லது நடைமுறைக்கு சாத்தியமானவையா என்பதை வாக்காளர்கள் பகுப்பாய்வு செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான 'அரசியல் தெளிவு' பிறக்கும் என்பதும் அரசியல் ஆர்வலர்களின் கருத்து.மக்கள் மன்றத்திற்கு வாருங்கள்...'ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் தொகுதிக்குள் வராமல், பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாதத்திற்கு ஒரு முறையாவது மக்கள் மன்றத்தைச் சந்திக்க வேண்டும்' என்பதே மக்களின் பிரதான எதிர்பார்ப்பு.
