/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கலைத்திருவிழா போட்டி; மாணவர்கள் பங்கேற்பு
/
கலைத்திருவிழா போட்டி; மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஆக 19, 2025 09:29 PM
உடுமலை:
உடுமலை வட்டாரத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களுக்கான கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்துவதற்கும், அடையாளப்படுத்துவதற்கும் கலைப்போட்டிகள் நடத்தப்படுகிறது.
கைவினைப்பொருட்கள் தயாரித்தல், ஓவியம், உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. இப்போட்டிகள் பள்ளி அளவில் முதற்கட்டமாக நடத்தப்படுகிறது.
உடுமலை வட்டாரத்தில், அரசு துவக்கம் முதல் மேல்நிலை வரை உள்ள அனைத்து பள்ளிகளிலும், தற்போது கலைத்திருவிழா போட்டிகள் நடக்கிறது.
நடப்பாண்டில், பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களையும் போட்டிகளில் பங்கேற்க செய்வதற்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அதில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் மாணவர்கள், அடுத்தகட்ட போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர். தற்போது பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில், மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: மாணவர்களுக்கு ஒவ்வொரு போட்டியாக நடத்தப்பட்டு, அதில் முதலிடம் பெறும் மாணவர்களின் வீடியோக்கள், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. வட்டார அளவில் பங்கேற்கும் மாணவர்களின் பெயர் பட்டியலும் தயார்படுத்தப்படுகிறது.
வட்டார அளவிலான போட்டிக்கு அறிவிப்பு வந்த பின், மாணவர்கள் அதில் பங்கேற்கஉள்ளனர்.
இவ்வாறு, தெரிவித்தனர்.