/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மீட்கப்படும் கலைகள்; வசப்படும் வாய்ப்புகள்
/
மீட்கப்படும் கலைகள்; வசப்படும் வாய்ப்புகள்
ADDED : ஜன 12, 2025 11:49 PM
தமிழகம் இயல், இசை, நாடகம் என முக்கலைகளிலும் சிறந்து விளங்கியது. சிலம்பாட்டம், கோலாட்டம், கும்மியாட்டம், காவடியாட்டம், ஒயிலாட்டம், உருமியாட்டம், ஆடு புலியாட்டம், பறையாட்டம், உறியடியாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம், குறவன் குறத்தி ஆட்டம் போன்றவை இடம் பெற்றிருந்தன.
பட்டிமன்றம், வில்லுப்பாட்டு, நாட்டுப்புறப்பாட்டு, உடுக்கைப் பாடல், தெருக்கூத்து, கழைக்கூத்து, நாடகம் ஆகியனவும், ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு உள்ளிட்ட வீர விளையாட்டுகளும் தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாசாரத்துடன் இணைந்தவை.
காலச்சக்கரத்தின் சுழற்சியில் இந்த பண்பாடு சார்ந்த கலைகள் மெல்ல மறைந்தும், மறந்தும் வருவது சற்று கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.வலை தளங்களின் வருகை நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதாக இருந்தாலும், இதன் மூலம் பண்பாடும், கலாசாரமும் தங்கள் இருப்பை இழந்து வருவது மறுக்க முடியாத உண்மை.
பொங்கல் போன்ற பண்டிகை நாட்களிலும், கிராமங்கள் மற்றும் அதனருகே அமைந்துள்ள நகர்ப்புறங்களில் கோவில் விழாக்கள், திருவிழாக்கள், பண்டிகை நாட்களில் கலைகளைப் பறைசாற்றும் நிகழ்ச்சிகள் இடம் பெறுவது சற்று ஆறுதலாக உள்ளது.
திருப்பூர் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் ஒயிலாட்டம், சிலம்பாட்டம், கும்மியாட்டம், பவளக்கொடி கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், கம்பத்தாட்டம் போன்ற சில கலைகளை மீட்டெடுக்கும் வகையில், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.
இதுபோன்ற கலையில், நுாற்றுக்கணக்கானோர் பகுதி வாரியாக ஆர்வத்துடன் திரண்டு இதைக் கற்றுக் கொள்வதையும்,வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் அவற்றை அரங்கேற்றம் செய்வதையும் சமீப காலமாகக் காணமுடிகிறது.
இன்றைய இளம் வயதினர், சிறுவர்கள் பெருமளவு இதில் பங்கேற்று ஆர்வத்துடன் பயின்றும், அரங்கேற்றமும் செய்கின்றனர்.மாறி வரும் காலச் சூழ்நிலையிலும், தங்கள் கலாசாரம், பண்பாடு இவற்றை மறந்து விடாமல் பின்பற்றும் வகையில் இதில் ஈடுபடுவது பாராட்டத்தக்க வகையில் உள்ளது.