
திருப்பூர்; திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசன விழாவில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீநடராஜர், சிவகாமியம்மன், 11 முறை பட்டி விநாயகரை சுற்றி வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
ஆருத்ரா தரிசன நாளான நேற்று, திருப்பூர் மற்றும் நல்லுார் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவில் உட்பட, அனைத்து சிவாலயங்களிலும், அதிகாலை, 3:00 மணிக்கு, நடராஜர் - சிவகாமியம்மனுக்கு மகா அபிேஷகம் நடந்தது; சிவாச்சாரியார்கள், 16 வகை திரவியங்களால் அபிேஷகம் செய்தனர். அதிகாலை, 5:30 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஆருத்ரா தரிசனம் கொடுத்தனர்.
பட்டி சுற்றிய பரமன்
காலை 10:00 மணிக்கு, நடராஜர் மற்றும் சிவகாமியம்மன், தனி சப்பரங்களில் எழுந்தருளினர். திருப்பூர் மற்றும் நல்லுார் கோவிலுக்கு முன்னதாக உள்ள பட்டிவிநாயகரை, தம்பதி சமேதரராக, 11 முறை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அதனை தொடர்ந்து, தேர்வீதிகளில் திருவீதியுலா சென்று அருள்பாலித்தனர்.
திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நேற்று, மூலவர் மற்றும் விசாலட்சியம்மன், வெள்ளிகவசத்துடன் கூடிய அலங்காரத்தில் அருள்பாலித்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில், மஞ்சள் சரடு, சாந்து, குங்குமம் உள்ளிட்ட பிரசாதம், சர்க்கரை பொங்கல், சாம்பார் சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆருத்ரா தரிசன நாளான நேற்று, கோவில் வளாகத்துக்குள், வெளியேயும், ஏராளமான பக்தர்கள், அன்னதானம் செய்தனர்.