/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உள்ளம் உருக, அருள் பெருக தயாரான அஷ்டபந்தன மருந்து!
/
உள்ளம் உருக, அருள் பெருக தயாரான அஷ்டபந்தன மருந்து!
உள்ளம் உருக, அருள் பெருக தயாரான அஷ்டபந்தன மருந்து!
உள்ளம் உருக, அருள் பெருக தயாரான அஷ்டபந்தன மருந்து!
ADDED : ஜன 31, 2024 11:28 PM

திருப்பூர்- அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழாவையொட்டி, சுவாமி திருமேனிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது; சிவனடி யார்கள், உலக்கையில் இடித்து, அஷ்ட பந்தன மருந்து தயாரித்தனர்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிேஷக விழா, கடந்த 24ம் தேதி விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. நான்கு கால வேள்வி பூஜை நிறைவு பெற்றுள்ள நிலையில், நேற்று அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது.
அவிநாசிலிங்கேஸ்வரர், பெருங்கருணை நாயகி, சுப்பிரமணியர் மூலவர் உட்பட, அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட்டது. காரைக்குடி, கும்பகோணம் பகுதிகளில் இருந்து வந்திருந்த சிவனடியார், அஷ்டபந்தன மருந்து தயாரிக்கும் கரசேவை செய்தனர்.
மந்திர உச்சாடனத்துடன் தெய்வ மூர்த்தங்கள், பீடத்தின் மீது அசையாது நிற்க, மந்திர உச்சாடனத்துடன், எண்வகை மருந்து சாற்றப்படுகிறது. உலக உயிர்களெல்லாம் நலமாக இருக்க வேண்டுமெனில், மூல தெய்வ மூர்த்தம், தனது ஆதார பீடத்தில் ஆடாமல், அசையாமல் நிற்க வேண்டும். அதற்காவே, அஷ்டபந்த மருந்து தயாரித்து சாற்றப்படுகிறது.
சிவாலயங்களின் கும்பாபிேஷக விழாவின் போது, அஷ்டபந்தன மருந்து சாற்றும் சேவையை, சிவனடியார்கள் செய்து வருகின்றனர். அதன்படி, காரைக்குடி ஆறுமுகம் தலைமையில், சிவனடியார்கள் இப்பணியை நேற்று மேற்கொண்டனர்.
மரத்தால் செய்த, சிறிய உரலில், எடுத்து வந்திருந்த அஷ்டபந்தன மருந்து கலவையை வைத்து, வெண்ணெய் சேர்த்து இடித்தனர். ஒவ்வொரு உரலிலும், தலா இருவர் உலக்கை கொண்டு வலுவாக இடித்தனர். நன்கு பதத்துக்கு வந்த பிறகு, சிவனடியார்கள் எடுத்துச்சென்று, சுவாமி சிலைகளில் வைத்து, மருந்துசாற்றினர்.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறுகையில், 'சுவாமிகளின் திருமேனியை, பீடத்தில் நிறுத்தி, அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது. கொம்பரக்கு, சுக்கான் துாள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன் மெழுகு, வெண்ணெய் ஆகிய எட்டு பொருட்களை கொண்டு அஷ்டபந்தன மருந்து தயாரிக்கப்படுகிறது.
இக்கலவை உருண்டைகளாக மாற்றி வைக்கிறோம். தலா, 1,500 ரூபாய் மதிப்புள்ள உருண்டையுடன், வெண்ணெய் சேர்த்து இடித்து தயார் செய்ய வேண்டும். அதற்கு பிறகே, சிலைகளில் சாற்றப்படும். அரக்கை காய்ச்சி சிலைக்கு சாற்றக்கூடாது.
பாரம்பரிய வழிபாட்டு முறைப்படி, உரலில் இடித்துத்தான் அஷ்டபந்தன மருந்து சாற்றப்பட வேண்டும். கோவில் முழுவதும் உள்ள சிலைகள் அனைத்திலும் அஷ்டபந்தன மருந்து சாற்றப்படுகிறது,' என்றனர்.
சிவனடியார்களின் கரசேவையை கண்ட பக்தர்களும், இறைபணியில் தாங்களும் பங்கேற்பதாக தெரிவித்து, உரலில் அஷ்டபந்தன மருந்து இடிக்கும் கரசேவையை செய்தனர்.
அருள் பொங்கும் தெப்பக்குளம்
அவிநாசி கோவிலின் தென்கிழக்கில் உள்ள தெப்பக்குளம், நான்குபுறமும் தலா, 125 அடி நீளம் உள்ளது. வழக்கமாக, தண்ணீர் இன்றி காணப்படும். திருப்பணி துவங்கிய பிறகு, சில நாட்கள் பெய்த மழை காரணமாக, குளத்தில் ஊற்று பெருகிறது. நீராழி மண்டபம் மேடை வரையில் தண்ணீர் உயர்ந்துள்ளது. சில நாட்கள், மோட்டார் மூலமாகவும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
நீராழி மண்டபம் அருகே யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், நேற்று, ராட்சத கிரேன் வரவழைக்கப்பட்டு, அதன் மூலம் சென்று, நீராழி மண்டபத்தை மூடியிருந்த துணிகளை அகற்றி, கும்பாபிேஷகத்துக்கு தயார்படுத்தினர். உண்மையாலும், கருணையம்மனும், அவிநாசியப்பரும் அகம் மகிழ்ந்திருப்பதால், தெப்பக்குளத்தில் அருளூற்று பெருகி, பொங்கி வழிந்ததாக, பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.