அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் திருட்டு; நிரந்தர தீர்வு என்ன?
அத்திக்கடவு - அவிநாசி திட்ட நீர் திருட்டு; நிரந்தர தீர்வு என்ன?
ADDED : ஜூன் 28, 2026 02:28 AM

திருப்பூர்: அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தின் கீழ் பல குளம், குட்டைகளுக்குத் தண்ணீர் சென்றடைவதில்லை என்ற புகாரைத் தொடர்ந்து, நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரகள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், சில இடங்களில் விவசாயிகள் பிரதான குழாய்களை உடைத்து தங்கள் நிலங்களுக்குத் தண்ணீரை மடைமாற்றுவது தெரியவந்துள்ளது. இத்தகைய செயல்கள் திட்டத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் முட்டுக்கட்டை போடும் சூழலை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 1,045 குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர் செறிவூட்டும் இத்திட்டத்தில், இந்தாண்டு பல நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரவில்லை என புகார் எழுந்தது.
இதையடுத்து, பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளும் 'எல் அண்ட் டி' நிறுவனத்தினர் சோதனை முறையில் தண்ணீரைத் திறந்துவிட்டபோது, சில விவசாயிகள் குழாய்களைத் துண்டித்துத் தண்ணீரைத் திருப்புவது அம்பலமாகியுள்ளது. இதனால் அடுத்தடுத்துள்ள குளங்களுக்குத் தண்ணீர் செல்வது தடைபடுகிறது.
சட்டவிரோதசெயல் கூடாது அத்திக்கடவு - அவிநாசி திட்ட குளம், குட்டை பாதுகாப்பு இயக்க தலைவர் பெரியசாமி கூறியதாவது:
குழாய்கள் நீண்ட துாரம் செல்வதாலும், போதிய நீர் அழுத்தம் இல்லாததாலும் கடைக்கோடி குளங்களுக்குத் தண்ணீர் செல்வதில் சிக்கல் உள்ளது.
அடைப்புகளை நீக்கி, வரும் செப்டம்பர் முதல் நவம்பருக்குள் அனைத்துக் குளங்களுக்கும் தடையின்றி தண்ணீர் வழங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என தலைமைப் பொறியாளர் உறுதியளித்துள்ளார்.
தண்ணீர் வரவில்லை என்ற ஆதங்கத்தில் குழாய்களைத் துண்டிக்கும் சட்டவிரோத செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது என விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
இத்திட்ட நடைமுறைப் பிரச்னைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு மட்டத்தில் பிரத்யேக 'கண்காணிப்புக் குழு' அமைக்க வேண்டும்.
இக்குழுவில் திட்ட அதிகாரிகள், எல் அண்ட் டி பிரதிநிதிகள், பஞ்சாயத்து தலைவர், வன அலுவலர், போலீசார் மற்றும் விவசாயிகள் இடம்பெற வேண்டும்.
இவர்கள் ஓரிரு மாத இடைவெளியில் தொடர்ந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தினால் திட்டப்பணிகள் தொய்வின்றி நடக்கும். இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
