/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மின் இணைப்புக்காக தீக்குளிக்க முயற்சி; போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
/
மின் இணைப்புக்காக தீக்குளிக்க முயற்சி; போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
மின் இணைப்புக்காக தீக்குளிக்க முயற்சி; போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
மின் இணைப்புக்காக தீக்குளிக்க முயற்சி; போலீஸ் பாதுகாப்புடன் பணி துவக்கம்
ADDED : அக் 10, 2025 12:17 AM

உடுமலை; உடுமலை அருகே, மின் இணைப்பு வழங்கக்கோரி டிரான்ஸ்பார்மர் அருகே, விவசாய குடும்பத்தினர் தீக்குளிக்க முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது; குடிமங்கலம் போலீசார் பாதுகாப்புடன் மின் இணைப்பு வழங்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
உடுமலை மின்பகிர்மான வட்டம், பொள்ளாச்சி கோட்டம், பெதப்பம்பட்டி உபகோட்டம், ராமச்சந்திராபுரம் மின்வாரிய பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதி சிக்கனுாத்து. இக்கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ்-ராமத்தாள் குடும்பத்தினர், தங்கள் விளைநிலத்துக்கு விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பத்திருந்தனர்.
கடந்தாண்டு அவர்களுக்கு, மின் இணைப்பு வழங்க மின்வாரியம் ஒதுக்கீடு வழங்கியது. கடந்தாண்டு மே 15ல், மின் இணைப்பு வழங்க மின்வாரியத்தினர் சென்ற போது தோட்டத்தின் அருகில் இருந்த சிலரது எதிர்ப்பால், இணைப்பு வழங்காமல் மின்வாரிய அதிகாரிகள் திரும்பினர்.
இவ்வாறு, பல முறை மின் இணைப்பு வழங்க செல்லும் போதும், அருகிலுள்ள நிலத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதும், மின்வாரிய அதிகாரிகள் திரும்புவதும் தொடர்கதையாக இருந்தது.
மின்வாரியம் தரப்பில், மின் இணைப்பு வழங்கும் பணிக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி குடிமங்கலம் போலீசுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் கோவிந்தராஜ், ராமத்தாள் குடும்பத்தினர் தவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று மின் இணைப்பு வழங்க கோரி, அங்கிருந்த டிரான்ஸ்பார்மர் முன் அக்குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஓராண்டுக்கும் மேலாக நீடிக்கும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால், தீக்குளிக்க போவதாக பெட்ரோலை உடலில் ஊற்றினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்த குடிமங்கலம் போலீசார் அவர்களை தடுத்தனர். இதையடுத்து, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மின் இணைப்பு வழங்கும் பணிகளை மின்வாரிய அதிகாரிகள் மேற்கொண்டனர்.
ஓராண்டு போராட்டத்துக்கு பிறகு மின் இணைப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால், அக்குடும்பத்தினர் நிம்மதியடைந்தனர். மின் இணைப்புக்காக அவர்கள் நடத்திய போராட்டத்தால் அப்பகுதியில் பல மணி நேரம் பரபரப்பு நிலவியது.