ADDED : பிப் 08, 2025 06:33 AM
திருப்பூர்; மாலை, நள்ளிரவு மற்றும் அதிகாலையில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. பகலில் வெயில் சுளீரென அடிக்கிறது. குழந்தைகள், இணைநோய் உள்ளவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என மருத்துவத்துறையினர் அறிவுறுத்துகின்றனர்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வர் டாக்டர் முருகேசன் கூறியதாவது:
குளிரில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, அதிகாலை நேரத்தில் சென்றால் கண், காது, காது, வாய் பகுதிக்குள் பனி நுழையாதபடி முற்றிலும் ஸ்வெட்டர் போட்டு நன்றாக மூடிக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான ஆடைகளை அணிய வேண்டும். வீட்டில் வயதானவர்கள் இருந்தால், கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும். குளிரால் அவதிப்பட நேர்ந்தால், உடனடியாக சூடான ஆகாரத்தை கொடுக்க வேண்டும். அவ்வப்போது சுடுநீர் குடிப்பது ஆரோக்கியமானது.
இயன்றவரை சூடான உணவுகளை சாப்பிட வேண்டும். தேவையான மருந்து, மாத்திரை இருப்பு வைக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் தொந்தரவு மூன்று நாட்களுக்கு மேலும் தொடர்ந்தால் டாக்டரை சந்தித்து சிகிச்சை பெற்றுச் செல்லலாம்.
கால்வலி ஏற்பட கூடியவர்கள் ஷூ, சாக்ஸ்களை வெளியே செல்லும் போது அணிய வேண்டும். இரவு, அதிகாலையில் தான் பனியின் தாக்கம் அதிகமாக உள்ளது. இத்தகைய நேரங்களில் பயணத்தை தவிர்த்திடலாம். பகலில் வெயில் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. இலகுவான பருத்தி ஆடை அணியலாம். குடையுடன் பயணிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
வெயில் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் இணை நோய் உள்ளவர்கள் வெளியே வராமல் இருப்பது நல்லது.
இவ்வாறு, டாக்டர் முருகேசன் கூறினார்.
நிலவேம்பு கஷாயம்
திருப்பூர் மத்திய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள மாவட்ட சித்தா மருத்துவ அலுவலகத்துக்கு வருவோருக்கு நிலவேம்பு கஷாயம் இலவசமாக வழங்கப்படுகிறது.