ADDED : ஆக 18, 2026 04:43 PM
தென்னையில் பரவும் நோய்த்தாக்குதல் குறித்து... வட்டார தோட்டக்கலைத்துறையினர் அட்வைஸ்
உடுமலை: சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தென்னை மரங்களில் இலைக்கருகல் பரவத்துவங்கியுள்ளது; மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் இந்நோய்த்தாக்குதலை கண்டறிந்து, கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வட்டார தோட்டக்கலைத்துறையினர் விவசாயிகளுக்கு வழிகாட்டுதல் வழங்கியுள்ளனர். உடுமலை வட்டாரத்தில், 20 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால பயிராக பராமரிக்கப்படும் தென்னை மரங்களில், நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் குறைவு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது.
இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்யாமல், வறட்சியான காற்று வீசி வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து மரங்களுக்கு தேவையான தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்னை ஏற்படுகிறது.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தென்னை மரங்களில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து உடுமலை வட்டார தோட்டக்கலைத்துறையினர் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
துறை உதவி இயக்குனர் கலாமணி தலைமையில் இக்குழுவினர் ராவணாபுரம், வலையபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொண்ட ஆய்வில், தென்னை மரங்களில் இலைக்கருகல் நோய் பரவலை கண்டறிந்தனர்.
அக்குழுவினர் கூறியதாவது:
உடுமலை வட்டாரத்தில் மழைப்பொழிவு இல்லாமல், வெயில் அதிகரித்து சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாலும், தென்னை மரங்களில் நோய்கள் பரவ துவங்கியுள்ளன.
அவ்வகையில், உடுமலை சுற்று வட்டார பகுதியில், தற்போது இலை கருகல் நோய் பரவ தொடங்கி உள்ளது. இந்நோயானது இளம் நாற்றுகள் மற்றும் முதிர்ந்த தென்னை மரங்களை தீவிரமாக தாக்கும்.
இந்த நோய்க்கிருமி இலை மற்றும் காய்களை பாதிக்கும். பொதுவாக முதிர்ந்த தென்னை ஓலைகளில் கீழாக வெளி சுற்றில் உள்ள இலைகளை பாதிக்கும். பாதிப்பிற்கு உள்ளான ஓலைகள் நுனியில் இருந்து கீழ் வரை கருக ஆரம்பிக்கும்.
இவை தீயில் எரிந்து போன தோற்றத்துடன் காணப்படும். காய்களின் நுனிப்பகுதியில் இருந்து, ஒழுங்கற்ற அலை வடிவிலான அடர் சாம்பலில் இருந்து, பழுப்பு நிறப் புள்ளிகள் விளிம்புகளில் காணப்படும்.
பூஞ்சையானது தேங்காய் பருப்பினில் நுழைவதால் தேங்காய் தரம் பாதிக்கிறது. பாதிக்கப்பட்ட காய்கள் வறண்டு சுருங்கி சிதைந்து முதிர்வதற்கு முன்பே விழுந்து விடுகிறது.
இதன் வாயிலாக, மரங்களில் 10 முதல் 25 சதவிகிதம் வரை காய்களின் மகசூல் குறைகிறது. இந்நோய் ஆண்டு முழுவதும் காணப்பட்டாலும், கோடை காலங்களில் அதிகளவு பரவுகிறது.
பாதிக்கப்பட்ட இலைப்பகுதிகளில் உள்ள பூஞ்சாணத்துகள்கள், நோயை பிறபகுதிகளுக்கு பரப்புகின்றன.
கட்டுப்படுத்தும் முறைகள் தென்னை மரங்களில் இலை கருகல் நோயால், தீவிரமான பாதிப்பிற்குள்ளான இலைகளை அகற்றி எரித்து நோய் பரவலை தடுக்கலாம்.
சூடோமோனாஸ் புளோரசன்ஸ், 200 கிராம் உடன், 50 கிலோ கிராம் தொழு உரம் (சாண எரு) மற்றும் 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்துக்கு ஓராண்டுக்கு என்ற விகிதத்தில் அளிக்க வேண்டும்.
மேலும், 2 கிராம் அல்லது ஹெக்ஸகோனசோல் 2 மில்லி லிட்டர் + 100 மில்லி லிட்டர் தண்ணீர் கலந்து மூன்று மாதம் இடைவெளியில், மூன்று முறை வேரின் மூலம் செலுத்தவும்.
வழக்கமாக ஒரு மரத்திற்கு வழங்கப்படுகின்ற பொட்டாஷ் , 2 கிலோ உடன் சேர்த்து, கூடுதலாக இரண்டு கிலோகிராம் பொட்டாசியம் சத்து இட வேண்டும்.
சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தென்னை மரங்களை தாக்கும் நோய்களை கண்டறிய, பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நோய்த்தாக்குதல் அறிகுறிகள் தென்பட்டால் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு, அக்குழுவினர் தெரிவித்தனர்.
