/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அவிநாசி ஏழு நிலை ராஜகோபுரம்: கம்பீரத்தின் அடையாளம்
/
அவிநாசி ஏழு நிலை ராஜகோபுரம்: கம்பீரத்தின் அடையாளம்
அவிநாசி ஏழு நிலை ராஜகோபுரம்: கம்பீரத்தின் அடையாளம்
அவிநாசி ஏழு நிலை ராஜகோபுரம்: கம்பீரத்தின் அடையாளம்
ADDED : ஜன 20, 2024 02:27 AM

- நமது நிருபர் -
இன்று... நேற்றல்ல, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் அமைத்து, 739 ஆண்டுகளாகி விட்டது. கொங்கு பாண்டியன் உருவாக்கி, பலரும் திருப்பணி செய்த பிறகு, கோவை கவுமார மடாலயம் உருவாக்கிய ராஜகோபுரம், இன்றும் சிவரூப அடையாளமாக கம்பீரமாக காட்சியளிக்கிறது!
'கோபுர தரிசனம்... கோடி புண்ணியம்! சாது தரிசனம்... பாவ விமோசனம்,' என்று ஞானத்தால் உயர்த்த அடியார்கள் உணர்த்தியுள்ளனர். காசியில் இருந்து தெற்கே வந்துதித்த எம்பெருமான் பரமேஸ்வரன், பார்வதி தேவிக்கு மட்டுமல்ல, பிரம்மதேவன், ஐராவதம் ஆகிய தேவஅம்சம் பொருந்தியவருக்கு மட்டுமல்ல, இலங்கை அசுரகுலத்தில் தோன்றிய தாடகைக்கும் நல்லருள் பாலித்து நட்கதியும் வழங்கியிருக்கிறார் அவிநாசிலிங்கேஸ்வரர்.
நாகக்கன்னிகை பூஜித்து பெரும்பேறு பெற்ற இத்தலத்தில், வியாதன், சங்ககண்ணன் என்ற வேடர்களும் இறைவனை நாடி நற்கதி பெற்றுள்ளனர்.
இப்படியாக, அனேகம் அடியாருக்கு நற்கதியும், சிவகதியும் வழங்கி அருளி, கொங்கு மண்டலத்தில் அருளாட்சி புரியும் அவிநாசியப்பர், நாடி வரும் பக்தருக்கெல்லாம் அன்னை பெருங்கருணை நாயகியுடன், கருணை மழை பொழிகிறார்.
அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் அருமைமிகு அடையாளமாக திகழும் ராஜகோபுரம், தமிழகத்தில் உள்ள, உயரமான கோபுரங்களில் ஒன்று. 108 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. முன், கொங்கு பாண்டியன் எனப்படும் சுந்தரபாண்டியன், (1285 - 1300) ராஜகோபுரம் கட்டினார். இடைக்காலத்தில், மொட்டை கோபுரமாக இருந்தது, அதனால், மைசூர் உடையாரின் பிரதிநிதி சங்கரய்யன் கட்டினார்.
சிரவை ஆதீனத்தின்சீரிய முயற்சியால்...
அதன்பின், 1860ல், இடிதாக்கி சேதமான ராஜகோபுரம், கோவை மாவட்ட கலெக்டர் உத்தரவுப்படி அகற்றப்பட்டது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கவுமார மடலாயம் காலஞ்சென்ற சுந்தரசுவாமிகள் முயற்சியால், ஏழு நிலை கொண்ட, புதிய கோபுரம் அமைத்து, 1980ல் மகா கும்பாபிேஷகம் சிறப்பாக நடைபெற்றது.
அதேபோல், தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கம் உதவியுடன், அம்மன் சன்னதிக்கு எதிரேயும், ஐந்து நிலை ராஜகோபுரம் எழுப்பப்பட்டது. ஏழு நிலை கோபுரத்தை கடந்து சென்றால், நவரங்க மண்டபம், கொடிமரம், பலிபீடம், கனகசபை, திருமாளிகை பத்திமண்டபம், சபா மண்டபம், திருக்கல்யாண உற்சவ மண்டபம் என, முழுமையான சோமஸ்கந்த முகூர்த்தத்துடன் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் வடிவம்பெற்றுள்ளது.
ராஜகோபுரம் அனேக அதிசயங்களுடன் வானுயர கம்பீரமாக காட்சியளிக்கிறது. வேறு எங்கும் இல்லாத வகையில், ராஜகோபுர நுழைவாயிலின் இருபுறமும், சிவகுடும்பத்தின் மூத்த பிள்ளையாகிய விநாயகர், நர்த்தன விநாயகராக, ஆனந்த நடனம் புரிந்தபடி வரவேற்கிறார். பைரவ ரூபமுடைய சிற்பங்களும் கதவு அருகே கம்பீரமாக காவல் புரிகிறது.
உயர்ந்த நிலைப்படியில் உச்சி பிள்ளையார் என்ற பெயருடன், விநாயகர் அருள்பாலிக்கிறார். பூமியில் மழைப்பொழிவு குறைந்து, வறட்சி தலையெடுக்கும்நேரத்தில், சிவாச்சாரியார்கள், இங்குள்ள உச்சிப்பிள்ளையாருக்கு பூஜை செய்து குளிரச்செய்தால், நிச்சயம் மாரி பொழிந்து குளர செய்யும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
இத்தகைய சிறப்புகள் பெற்ற அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், வரும், பிப்., 2ம் தேதி மகா கும்பாபிேஷகம் நடைபெறுகிறது. எல்லாம்வல்ல அவிநாசியப்பர் அருள்பெற அவிநாசிக்கு வாருங்கள் என கோவில் நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.