/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேரிடர் காலத்தில் அச்சம் தவிர்; துணிந்து நில்!
/
பேரிடர் காலத்தில் அச்சம் தவிர்; துணிந்து நில்!
ADDED : அக் 18, 2025 12:01 AM

திருப்பூர்: 'வெள்ளப்பெருக்கு, தீ விபத்து போன்ற பேரிடர்களின்போது பயப்படக்கூடாது; துணிச்சலுடன் செயல்பட்டு, பாதிக்கப்பட்டவர்களை காப்பாற்ற வேண்டும்,' என, தீயணைப்பு துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் பேசினார்.
பேரிடர் அபாய குறைப்பு தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்ட தீயணைப்பு துறை சார்பில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கலெக்டர் மனிஷ் நாரணவரே , தீயணைப்பு துறையினரின் ஒத்திகை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். தீயணைப்பு துறை மாவட்ட அலுவலர் அண்ணாதுரை, உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் உள்பட தீயணைப்பு வீரர்கள் பங்கேற்றனர்.
தீயணைப்பு வீரர்கள் தத்ரூப செயல்விளக்கம்
திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு தீயணைப்பு வீரர்கள், உயரமான இடங்களில் சிக்கிய தீ விபத்து உள்ளிட்ட பேரிடரில் சிக்கிய நபர்களை, கயிறு கட்டி மீட்பது; கயிறு இல்லாதபோது, தார்ப்பாய் பயன்படுத்தி மீட்பது; காயமடைந்து ரத்தம் வெளியேறும் நிலையில் உள்ளவர்களை துாக்கிச் செல்லும் வழிமுறைகள்; உடலில் தீப்பிடித்த நபர் மீது, தண்ணீர் நனைத்த பெட்ஷீட் போர்த்தி, தரையில் உருளச்செய்து அணைப்பது குறித்து தத்ரூபமாக செய்து காண்பித்தனர்.
மீட்புக்கருவியாக மாறும் தெர்மோகோல், குடங்கள்
தீயணைப்புத்துறை உதவி மாவட்ட அலுவலர் வீரராஜ் பேசியதாவது:
திடீரென வெள்ளப்பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்படும்போது, நீச்சல் தெரியும் என்பதற்காக நாம் நம்மை மட்டும் காப்பாற்றிக்கொண்டால் மட்டும்போதாது; சார்ந்துள்ள நமது உறவினர்கள், நண்பர்களையும் மீட்கவேண்டும்.
தகவல் கிடைத்து தீயணைப்புத்துறை வரும் வரை காத்திருக்க கூடாது; பேரிடர் காலங்களில், பல்வேறு காரணங்களால், பாதித்த இடத்தை தீயணைப்பு துறையினர் வந்தடைவதில் தாமதங்கள் ஏற்படலாம்.
எந்த சூழலிலும் பயப்படக்கூடாது; பலம் மிக்கவர்களால்தான், எத்தகைய பேரிடர்களையும் எதிர்கொள்ளமுடியும். வீட்டிலுள்ள தண்ணீர் கேன், தெர்மாகோல், காலி குடங்களையே மீட்பு கருவிகளாக மாற்றி, மீட்பு பணிகளை மேற்கொள்ளமுடியும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
திருப்பூர் வடக்கு தீயணைப்பு துறை சார்பில், குமரன் ரோட்டிலுள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
---