ADDED : மார் 02, 2026 04:38 AM

பல்லடம்: பல்லடம் இமைகள் ரோட்டரி சங்கம் மற்றும் மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில் கிருத்திகை வார வழிபாட்டு குழு சார்பில், பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு வேள்வி நடந்தது.
சிறப்பு வேள்வியை துவக்கி வைத்து, கோவை சரவணம்பட்டி கவுமார மடாலய ஆசிரியர் ஜெகநாதன் பேசியதாவது:
அதீத நம்பிக்கை என்பது அதீத சக்தியை கொடுக்கும். இது முன்னோர்கள் நமக்கு கூறிச் சென்றது. மந்திரம் என்பதும் வயிற்றில் துவங்கி, மூச்சுடன் கலந்து, நாசி வழியாக வர வேண்டும். அவ்வாறு சொல்லும்போது அதற்கு ஆற்றல் அதிகம்.
தேர்வு நாளன்று முறையாக மந்திரங்கள் சொல்லி, பெற்றோர் காலில் விழுந்து ஆசி பெற்று செல்லும்போது, அவர்கள் மனம் குளிரும். நல்ல செயல்கள் நல்ல முடிவைத் தான் தரும்.
ஆங்கிலமோ, தமிழோ, முதல் எழுத்துகளுக்கு அதிக ஆற்றல் தந்து உச்சரிக்கும்போது, அது மனதில் எளிதில் பதியும். தேவையற்ற அச்சத்தை கைவிட்டு, இதையே படிக்கும் போதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வேள்வி வழிபாட்டை தொடர்ந்து, பூஜிக்கப்பட்ட கலச தீர்த்தங்களால், மூலவர் முத்துக்குமார சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மேலும், பூஜையில் வைக்கப்பட்ட எழுது பொருட்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.
சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பங்கேற்ற அனைவருக்கும் கிருத்திகை வார வழிபாட்டு குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
