ADDED : மார் 13, 2026 05:49 AM

பல்லடம்: பல்லடம் வனம் அமைப்புக்கு, திருப்பூர் மாவட்ட அளவிலான, 'பசுமை முதன்மையாளர்' விருது வழங்கப்பட்டது.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், பசுமையை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் தன்னார்வ அமைப்புகளுக்கு ஆண்டுதோறும், 'பசுமை முதன்மையாளர்' விருது வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்ட அளவில், 2024--25ம் ஆண்டுக்கான விருது, பல்லடம் வனம் இந்தியா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'மரக்கன்று நடுதல், சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் ஆகிய பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும், 'பசுமை முதன்மையாளர்' விருது வழங்கப்படுகிறது.
இந்த விருதை பெறுவதற்காக, திருப்பூர் மாவட்ட அளவில், பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் விண்ணப்பித்திருந்தன. அவற்றை ஆய்வு செய்யப்பட்டதன் அடிப்படையில், முதல் மூன்று தன்னார்வ நிறுவனங்களுக்கு பசுமை முதன்மையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதில், பல்லடம் வனம் அமைப்பும் ஒன்று,' என்றனர்.
கலெக்டர் மனிஷ் நாராணவரே விருது வழங்க, வனம் அமைப்பின் இணை செயலாளர் ஈஸ்வரமூர்த்தி பெற்று கொண்டார். விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வழங்கப்பட்டது.
