ADDED : அக் 11, 2024 12:32 AM

திருப்பூர்: திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், போதை இல்லா தமிழ்நாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில், நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, அலகு 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ண மூர்த்தி, கவிபாலா, கவியரசு ஆகியோர் தலைமையில் மாணவர்கள்,' போதைப் பொருள் பழக்கம் உள்ளவர்களின் உடல் உறுப்பு பாதிக்கப்படுவதோடு மனமும் பாதிக்கப்படும், பல தீய விஷயங்கள் நடைபெறுவதற்கு போதை வஸ்துகள் காரணமாகின்றன.
போதை பொருட்கள் பயன்பாட்டினை அடியோடு வேரறுக்க, அரசுக்கு துணை நிற்க ஒவ்வொருவரும் சபதம் ஏற்க வேண்டும்,' என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மாணவர்கள் 'போதை வேண்டாம்' என்ற முக வர்ணம் வரைந்தும், துண்டு பிரசுரம் கொடுத்தும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.