ADDED : பிப் 17, 2024 01:41 AM
அவிநாசி அருகே, துலுக்கமுத்துார் கிராமத்தில், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ், ஊட்டச்சத்து மிக்க சிறு தானியங்கள் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கான பயிர் சாகுபடி சார்ந்த ராபி பருவ தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து திட்டத்தின் திட்ட ஆலோசகர் அரசப்பன் பேசுகையில், ''சிறு தானியங்களில் மாவுச்சத்து, புரதச்சத்து, வைட்டமின், தாது உப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவை உள்ளன; இதனால், பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. உடலில், தேவையற்ற கொழுப்பு சேர்வது, தவிர்க்கப்படும். சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்; செரிமானம் வேகமாக நடக்கும். கோ (எஸ்-32) ரக சோள சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட வேண்டும். இது, அதிக மகசூல் தரவல்லது'' என்றார்.முன்னதாக, திருப்பூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகி, வரவேற்றார்.
வேளாண்மை அலுவலர் சுகன்யா, உதவி வேளாண்மை அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, திவ்யாபாரதி மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.