/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அன்று... பணம் கொழித்த கல் குவாரிகள்! இன்று... மரண பயம் காட்டும் குழிகள்
/
அன்று... பணம் கொழித்த கல் குவாரிகள்! இன்று... மரண பயம் காட்டும் குழிகள்
அன்று... பணம் கொழித்த கல் குவாரிகள்! இன்று... மரண பயம் காட்டும் குழிகள்
அன்று... பணம் கொழித்த கல் குவாரிகள்! இன்று... மரண பயம் காட்டும் குழிகள்
ADDED : நவ 07, 2025 09:44 PM

இன்று, குப்பைக் கழிவுகளால் நிரம்பிக்கிடக்கும் பாறைக்குழிகள், ஒரு காலத்தில் கனிம வளம் நிரம்பிய குவாரிகளாக இருந்தவை தான்.கல், மண், மணல் என, நிலத்திலும், பாறைகளிலும் புதைந்து கிடக்கும் அனைத்தும், இயற்கை நமக்கு வழங்கிய கனிம வளங்கள் தான். வளர்ந்து வரும் நகரங்களில் உட்கட்டமைப்பும் மேம்பட வேண்டும்; இத்தகைய கட்டமானப்பணிகளுக்கு இந்த கனிம வளங்கள் தான் மூலப்பொருள்.
அதே நேரம், கல்லும், மண்ணும், மணலும் குவிந்து கிடக்கும் இந்த இயற்கையின் கொடைகளை சற்றே சிதைத்தால் தான், கனிம வளங்கள் கிடைக்கும். ஆனால், அளவுக்கு அதிகமாக சுரண்டுவதால் ஏற்படும் சீற்றம் தான் மண் சரிவு, நிலச்சரிவு உள்ளிட்ட அபாயங்களை ஏற்படுத்தி விடுகிறது.
விதிமுறை ஏராளம்
இத்தகைய கனிம வளங்களை அள்ள, எண்ணற்ற விதிமுறைகளை வகுத்திருக்கிறது அரசு. கனிம வளங்களை பொறுத்தவரை மணல் குவாரி, கல் குவாரி என, எதுவாக இருப்பினும், அவை பணம் கொழிக்கும் இடங்கள் தான்; அதுவும், பல கோடிகளில். குவாரிகளில் இருந்து கனிம வளங்களை எடுக்க, கனிமவளத்துறை உரிமம் பெற வேண்டும். குவாரியின் எல்லையை மஞ்சள் கற்களை ஊன்றி, வரையறுக்க வேண்டும். குவாரி அருகில், 7.5 மீட்டர் தொலைவுக்கு பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.
10 மீட்டருக்குள் நீராதாரம், வழித்தட பாதைகள் இருக்கக்கூடாது. 50 மீட்டர் தொலைவுக்குள் உயர், குறைந்த அழுத்த மின்பாதையோ, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியோ இருக்க கூடாது. குவாரி கற்கள் வெட்டப்படும் போது கிளம்பும் துாசை கட்டுப்படுத்த, மாசு கட்டுப்பாடு ஏற்பாடாக குவாரி அருகில் மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என்பது போன்ற எண்ணற்ற விதிமுறைகள் உள்ளன. அவ்வாறு, உரிமம் மீறப்படுவது உறுதி செய்யப்பட்டால், பல கோடி ரூபாய்களில் தான் அபராதம் விதிக்கப்படுகிறது.
இத்தகைய மதிப்பு மிக்க, குவாரிகளில் இருந்து, கனிம வளங்களை அள்ளி முடித்த பின், அவை, 'காலாவதியான, கைவிடப்பட்ட பாறைக்குழிகள்' என, ஓரங்கட்டுப்பட்டு விடுகின்றன. அன்று, கனிம வளங்களை சுரண்டி எடுத்ததால் ஏற்பட்ட குழிகள் தான், இன்று, மாநகராட்சியின் குப்பைக் கொட்டும் இடங்களாக மாறி கிடக்கின்றன.
முதலிபாளையம், காளம்பாளையம், அம்மாபாளையம் என, கைவிடப்பட்ட பாறைக்குழிகளை தேடி பிடித்து, அவற்றை குப்பைக் கழிவால் நிரப்பி கொண்டிருக்கிறது, மாநகராட்சி நிர்வாகம்.கனிம வளங்கள் குவிந்து கிடந்த போது எண்ணற்ற விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. ஆனால், அவற்றை குப்பைக் கழிவால் நிரப்பும் போது, அடிப்படை சுகாதார விதிமுறை கூட பின்பற்றப்படுவதில்லை என்பது தான், வேதனையின் உச்சம்.---
பணம் கொழித்த குவாரியாக இருந்த பாறைக்குழிகள், காலாவதியான பின், அவை நீர் நிலைகளாக மாறியிருந்தன. அவற்றில் மாநகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டி பாழ்படுத்தியிருக்கிறது. சென்னை கொடுங்கையூரில், 350 ஏக்கர்; பெருங்குடியில், 120 ஏக்கரில் கொட்டப்பட்ட குப்பையை பயோமைனிங் செய்யும் பணி நடக்கிறது. முதலிபாளையம், காளப்பாளையம், மும்மூர்த்தி நகர் பாறைக்குழியில் கொட்டப்பட்ட குப்பைகளை பயோ மைனிங் முறையில் சுத்தம் செய்ய வேண்டும்.
- வேலுசாமி, தலைவர்பி.ஏ.பி., வெள்ளகோவில் கிளை கல்வாய் பாதுகாப்பு சங்கம்

