ADDED : மார் 19, 2026 05:06 AM

பல்லடம்: திருப்பூர் சுற்றுவட்டார பகுதியில் வசித்து வரும் வெளி மாநில தொழிலாளர் குடும்பங்கள், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியைத்தான் பயன்படுத்தி வருகின்றனர்.
கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் புழுங்கல் அரிசி, பழுப்பு நிறத்துடன், குப்பைகள், கசடுகள் நிறைந்து, மிகவும் மோசமாக உள்ளதாக, பலமுறை குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான நடவடிக்கையை தொடர்ந்து, ரேஷன் அரிசி குறித்து, சமீபகாலமாக எந்தவித குற்றச்சாட்டுகளும் எழவில்லை. சட்டசபை தேர்தல் பரபரப்புக்கு இடையே, அரிசி தற்போது மீண்டும் மட்டமானதாக உள்ளது என்ற குற்றச்சாட்டு எழத் துவங்கியுள்ளது.
பொதுமக்கள் கூறுகையில், 'ரேஷனில் இம்மாதம் வழங்கப்பட்டுள்ள அரிசி மகா மட்டமாக உள்ளது. பழுப்பு நிறத்துடன், அளவில் பெரியதாகவும் உள்ளது. இந்த அரிசி, வேக வேண்டும் எனில், குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஆகும். ஏற்கனவே காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இந்த அரிசியை சமையலுக்கே பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. தரமான அரிசி வழங்க வேண்டும்,' என்றனர்.
