/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பனியன் நிறுவனங்கள் இயங்கின! திருப்பூரில் ஸ்டிரைக் 'பிசுபிசுப்பு'
/
பனியன் நிறுவனங்கள் இயங்கின! திருப்பூரில் ஸ்டிரைக் 'பிசுபிசுப்பு'
பனியன் நிறுவனங்கள் இயங்கின! திருப்பூரில் ஸ்டிரைக் 'பிசுபிசுப்பு'
பனியன் நிறுவனங்கள் இயங்கின! திருப்பூரில் ஸ்டிரைக் 'பிசுபிசுப்பு'
ADDED : ஜூலை 10, 2025 09:54 AM

திருப்பூர்; தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்த நிலையில், திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் பனியன் நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கின.
தொழிலாளர் நலன்சார்ந்த கோரிக்கையை முன்வைத்து, மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், ஏ.ஐ.டி.யு.சி., - சி.ஐ.டி.யு., - ஐ.என்.டி.யு.சி., - எல்.பி.எப்., - எச்.எம்.எஸ்., -எம்.எல்.எப்., - ஏ.ஐ.சி.சி.டி.யு., - யு.டி.யு.சி., சங்கங்கள் சார்பில், போராட்டம் நடந்தது.
பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் போராட்டத்தில் பங்கேற்க வேண்டுமென, அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும், திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இயங்கும் பெரும்பாலான பனியன் நிறுவனங்கள், நிட்டிங், பிரின்டிங், சாய ஆலைகள் உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கின.
உள்நாட்டு உற்பத்தி ஆர்டர்கள் சீராக இருப்பதாலும், ஏற்றுமதி ஆர்டர்களை உரிய நேரத்தில் அனுப்ப வேண்டியும், பனியன் நிறுவனங்கள் வழக்கமான உற்பத்தியை தொடர்ந்தன. தொழிலாளர் அதிகம் வராத சில நிறுவனங்கள் மட்டும் நேற்று இயங்கவில்லை. பெரும்பாலான நிறுவனங்கள், வழக்கமான உற்பத்தி பணிகளை தொடர்ந்தன.
இதனால், திருப்பூர் நகரப்பகுதியில் வழக்கமான பரபரப்பு குறையவில்லை. அரசு பஸ்கள் மற்றும் டவுன் பஸ்கள் வழக்கம் போல் இயங்கின. பயணியர் ஆட்டோ மற்றும் சரக்கு வாகனங்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்து, பெரும்பாலான வாகனங்கள் நேற்று இயங்கவில்லை. திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள கடைகள், வணிக வளாகங்கள் வழக்கம் பரபரப்பாக செயல்பட்டன.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியனிடம் கேட்டபோது, ''பின்னலாடை ஏற்றுமதி ஆர்டர்களை, உரிய காலத்துக்குள் அனுப்ப வேண்டும் என்பதால், வழக்கமான உற்பத்தி தொடரப்பட்டது. ஏற்றுமதி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்கியது,'' என்றார்.