/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் வரத்தால் மாற்றம்! அணை நிரம்பியதால் இடைவெளியில்லை
/
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் வரத்தால் மாற்றம்! அணை நிரம்பியதால் இடைவெளியில்லை
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் வரத்தால் மாற்றம்! அணை நிரம்பியதால் இடைவெளியில்லை
பி.ஏ.பி. நான்காம் மண்டல பாசன நிலங்களுக்கு நீர் வரத்தால் மாற்றம்! அணை நிரம்பியதால் இடைவெளியில்லை
ADDED : அக் 29, 2025 12:21 AM
உடுமலை: பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு, மூன்று சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்ட நிலையில், பருவ மழையால் நீர் வரத்து அதிகரித்து, திருமூர்த்தி அணை நீர்மட்டம் உயர்ந்ததால், 4ம் சுற்றுக்கும் இடைவெளியின்றி நீர் வழங்கப்படுகிறது.
பி.ஏ.பி., 4ம் மண்டல பாசனத்தின் கீழ் பயன்பெறும், கோவை, திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 94 ஆயிரத்து, 68 ஏக்கர் நிலங்களுக்கு, கடந்த ஜூலை, 27ம் தேதி, திருமூர்த்தி அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டது.
வரும், டிச., 9 வரை, 135 நாட்களில், உரிய இடைவெளி விட்டு, 10 ஆயிரத்து, 250 மில்லியன் கனஅடி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், மண்டல பாசன நிலங்களுக்கு, வழக்கமாக, 21 நாட்கள் நீர் திறப்பு, ஏழு நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் நீர் வழங்கப்படும்.நடப்பாண்டு தென்மேற்கு பருவ மழை கூடுதலாக பெய்ததோடு, திட்ட தொகுப்பு அணைகளிலும் நீர்மட்டம் திருப்தியாக உள்ளது.
அதே போல், திட்ட தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் வாயிலாகவும், தடையின்றி திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து காணப்பட்டதால், தற்போது நடைபெற்று வரும் நான்காம் மண்டல முதல் மூன்று சுற்றுக்கள் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டது.
பாசனத்திற்கு நீர் வழங்கியதால், திருமூர்த்தி அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 60 அடியில், 38 அடியாக குறைந்ததால், 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட திட்டமிடப்பட்டு, கடந்த, 26ல் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, திருமூர்த்திமலைப்பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர் வரத்து அதிகரித்த நிலையில், அணை நிரம்பி, உபரி நீர் திறக்கும் சூழல் ஏற்பட்டது.
இதனால், பாலாறு வழியோர கிராமங்களுக்கு கடந்த, 24ம் தேதி, முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அணை நீர்மட்டம் உயர்ந்த நிலையில், உபரி நீர் திறப்பதற்கு பதில், நீரை முழுமையாக பயன்படுத்தும் வகையில், 4ம் மண்டலம், நான்காம் சுற்றுக்கு இடைவெளியின்றி நீர் வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, நான்காம் சுற்றுக்கு இடைவெளியின்றி, பிரதான கால்வாயில் தொடர்ந்து நீர் வழங்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் கூறியதாவது: திருமூர்த்தி அணை நீர் மட்டம் குறைந்ததால், 4ம் மண்டல பாசனம், 4ம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு, நவ., முதல் வாரத்தில் நீர் வழங்க திட்டமிடப்பட்டது.
இந்நிலையில், வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து, திருமூர்த்தி அணை மற்றும் திட்ட தொகுப்பு அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்ததால், கிடைக்கும் மழை நீரை முறையாக பயன்படுத்தும் வகையிலும், பாசன பகுதிகளிலுள்ள பயிர்களுக்கு தொடர்ந்து நீர் வழங்கும் வகையிலும், இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதே நிலை தொடர்ந்தால், 5ம் சுற்றுக்கும் இடைவெளியின்றி நீர் வழங்கப்பட்டு, நடப்பாண்டு மண்டல பாசனத்திற்கு, ஐந்து சுற்றுக்களும் இடைவெளியின்றி நீர் வழங்கிய சாதனையாக மாறும்,என்றனர்.
அணை நிலவரம் திருமூர்த்தி அணையில், நீர் மட்டம் மொத்தமுள்ள 60 அடியில், நேற்று காலை, 52.85 அடியாக இருந்தது. மொத்த கொள்ளவான, 1,935.25 மில்லியன் கன அடியில், 1,628.43 மில்லியன் கன அடியாக இருந்தது.
நீர் வரத்து வினாடிக்கு, 820 கன அடியாக இருந்தது. அணையிலிருந்து, பிரதான கால்வாயில், 803 கன அடி நீர், உடுமலை கால்வாயில், 163 கன அடி நீர், குடிநீர், 21, இழப்பு, 2 என, 989 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்தது.

