/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பி.ஏ.பி. பாசன மடை அடைப்பு: விவசாயிகள் அதிர்ச்சி
/
பி.ஏ.பி. பாசன மடை அடைப்பு: விவசாயிகள் அதிர்ச்சி
ADDED : நவ 12, 2025 11:28 PM

உடுமலை: மடத்துக்குளம் அருகே, பி.ஏ.பி., பாசன கடைமடைக்கு தண்ணீர் திறக்க வழியில்லாமல், வாய்க்காலில் உள்ள பாசன மடையை கான்கிரீட் போட்டு அடைந்ததாக விவசாயிகள் புகார்- தெரிவித்துள்ளனர்.
திருமூர்த்தி அணையிலிருந்து, பி.ஏ.பி., நான்காம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதில் உடுமலை கால்வாயிலிருந்து பிரியும் பகிர்மானக் கால்வாய் வாயிலாக, மடத்துக்குளம் மைவாடி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பாசனம் பெற்று வருகின்றனர்.
இதில் உள்ள கிளை கால்வாயில், கடைமடைக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல் அடைத்து வைத்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பி.ஏ.பி., பாசனத்திட்டத்தில், இரு ஆண்டு களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் கிடைக்கும். நடப்பு, 4ம் மண்டல பாசனத்துக்கு, கடந்த ஜூலை, 27ம் தேதி முதல் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக 21 நாட்கள் திறப்பு, 7 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில் பாசனத்துக்கு தண்ணீர் வழங்கப்படும். ஆனால் நடப்பு ஆண்டில் பருவமழை கைகொடுத்ததாலும், திருமூர்த்தி அணையின் நீர்இருப்பு திருப்திகரமாக இருந்தாலும், இடைவெளியில்லாமல், 4 சுற்றுகள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
மைவாடி வாய்க்காலில் தற்போது, 4ம் சுற்று தண்ணீர் பாய்ந்து வருகிறது. அதில் கடைமடையிலுள்ள சுமார் 30 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் செல்ல வழியில்லாமல், சிலர் மடையை கான்கிரீட் போட்டு அடைத்து வைத்துள்ளனர். இதனால், பாசன நீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம்.
ஒரு சிலரின் சுய லாபத்துக்காக மடை அடைக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் கடுமையாக பாதித்து வருகிறோம். தண்ணீரின்றி, பயிர்களும் காய்ந்து வருகிறது. நீர்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும், அலட்சியமாக உள்ளனர்.
அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து அடைக்கப்பட்ட மடையை திறந்து, கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்க வழி ஏற்படுத்தாவிட்டால், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு தெரிவித்தனர்.

