/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குப்பை தொட்டியாக மாறும் பி.ஏ.பி.,
/
குப்பை தொட்டியாக மாறும் பி.ஏ.பி.,
ADDED : மார் 15, 2025 11:58 PM
பொங்கலுார்: பி. ஏ.பி., வாய்க்கால், 124 கிலோ மீட்டர் நீளம் உடையது. வாய்க்கால் பெரும்பாலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் செல்கிறது.
இது 'குடி'மகன்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது. 'குடி'மகன்கள் திறந்த வெளி பாராகவே இதை பயன்படுத்தி வருகின்றனர். அத்துடன் அவர்கள் கொண்டுவரும் தண்ணீர் பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள், காலி மது பாட்டில் ஆகியவற்றை வாய்க்கால் கரைகளிலும், வாய்க்கலிலும் வீசுகின்றனர். இதை தட்டிக் கேட்கும் விவசாயிகளுக்கும், குடி'மகன்களுக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்படுகிறது.
ஏராளமான கோழி பண்ணைகள் சுல்தான்பேட்டை பகுதியில் செயல்படுகின்றன. பண்ணையாளர்கள் தங்கள் பங்குக்கு நோயால் இறந்த கோழிகளை வாய்க்காலில் வீசுகின்றனர்.
விவசாயிகள் பெரும் போராட்டங்களை நடத்தியதால் சில மாதங்களாக குறைந்து இருந்த இறந்த கோழிகளின் எண்ணிக்கை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.
பொங்கலுார், காங்கயம் பகுதிகளில் உள்ளாட்சி நிர்வாகங்கள் குப்பைகளை வாய்க்காலில் கொட்ட பொதுமக்களை அனுமதிக்கின்றன. இதனால், விவசாய நிலத்திற்குச் செல்லும் பி.ஏ.பி., தண்ணீர் அசுத்தமடைகிறது.
விவசாயிகள் கூறுகையில், 'குடிமகன்களை வாய்க்காலில் குடிக்க அனுமதிப்பதன் மூலம் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற சட்டவிரோத செயல்கள் அதிகரித்துள்ளது. வாய்க்காலில் குப்பை கொட்டும் விவகாரத்தில் உள்ளாட்சி நிர்வாகங்கள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக செயல்படுகின்றன. இதே நிலை நீடித்தால் எதிர்காலத்தில் வாய்க்காலே காணாமல் போகும் அபாயம் உள்ளது' என்றனர்.