/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வட்டமலைக்கரை அணைக்கு பி.ஏ.பி., தண்ணீர்
/
வட்டமலைக்கரை அணைக்கு பி.ஏ.பி., தண்ணீர்
ADDED : ஜூலை 04, 2025 11:07 PM

திருப்பூர்; 'பி.ஏ.பி., நான்காவது மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்னதாக, வட்டமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்' என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காங்கயம், வட்டமலைக்கரை அணை பகுதி விவசாயிகள், கலெக்டரிடம் கொடுத்த மனு:
காங்கயம் சுற்றுப்பகுதிகளில் போதிய மழை பெய்யாமல், வறட்சி நிலவுகிறது. பொதுமக்களின் குடிநீர் தேவை மற்றும் பிரதான வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளுக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கி, பி.ஏ.பி.,பாசன திட்டத்தில் உள்ள தொகுப்பணைகள் நிரம்பியுள்ளன; சில நாட்களாக உபரிநீர் வெளியேறி வருகிறது. கடலுக்கு செல்லும் தண்ணீரை பாதுகாப்பான முறையில் பயன்படுத்த வேண்டும்.
பி.ஏ.பி., பாசன திட்டத்தில், 3வது மண்டலத்தில் பாசனம் நிறைவு பெற்றுள்ளது. நான்காவது மண்டலத்துக்கு தண்ணீர் திறக்க, வாய்க்கால் துார்வாரும் பணி நடந்து வருகிறது. பணிகள் நிறைவு பெற ஒரு மாதமாகும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நான்காவது மண்டலத்துக்கு தண்ணீர் திறக்கும் முன்னதாகவே, 2021 கோர்ட் உத்தரவுப்படியும், வட்டமலைக்கரை அணைக்கு விரைவாக தண்ணீர் திறக்க வேண்டும்.
அவ்வழியில் உள்ள சிறிய தடுப்பணைகளும் நிரம்பும் போது,பல்வேறு கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். பிரதான வாழ்வாதாரமாக உள்ள கால்நடைகளுக்கும் போதிய தண்ணீர் கிடைக்கும். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, பி.ஏ.பி., திட்டத்தில் இருந்து, வட்டமலைக்கரை ஓடைஅணைக்கு தண்ணீர் திறக்க முன்வரவேண்டும்.