/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் அருகில் 'பார்' மக்கள் போராட்டம்
/
கோவில் அருகில் 'பார்' மக்கள் போராட்டம்
ADDED : அக் 15, 2024 10:25 PM
உடுமலை: உடுமலை அருகே, பழமையான கோவில் அருகில், தனியார் மதுபான 'பார்' துவக்க எதிர்ப்பு தெரிவித்து,மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
உடுமலை அருகே தேவனுார்புதுார் நவக்கரை பள்ளத்தின் கரையில், பழமையான தாத்தையன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகில், தனியார் மதுபான 'பார்' அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கோவில் மற்றும் மக்கள் பயன்படுத்தும் பஸ் ஸ்டாப் அருகே, மதுபான 'பார்' அமைக்கக்கூடாது என, மக்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் மனு அனுப்பினர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், நேற்று கோவில் அருகில், ஆனைமலை ரோட்டில் அமர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், தனியார் மதுபான 'பார்' துவக்க அனுமதி வழங்க கூடாது; கோவில் மற்றும் நவக்கரை பள்ளம் நீரோடை பாதிக்கும் வகையிலான பணிகளை, தடுத்து நிறுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
தளி போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்தனர். இதையடுத்து, மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச்சென்றனர். போராட்டத்தால், ஆனைமலை ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.