/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தாவரங்கள் பெருக்கத்துக்கு உதவும் வவ்வால்கள்! நகரில் எண்ணிக்கை அதிகரிப்பு
/
தாவரங்கள் பெருக்கத்துக்கு உதவும் வவ்வால்கள்! நகரில் எண்ணிக்கை அதிகரிப்பு
தாவரங்கள் பெருக்கத்துக்கு உதவும் வவ்வால்கள்! நகரில் எண்ணிக்கை அதிகரிப்பு
தாவரங்கள் பெருக்கத்துக்கு உதவும் வவ்வால்கள்! நகரில் எண்ணிக்கை அதிகரிப்பு
ADDED : பிப் 12, 2024 11:20 PM
உடுமலை:நகரில், நாள்தோறும் வலம் வரும் ஆயிரக்கணக்கான வவ்வால்களை உள்ளடக்கிய கூட்டம், அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது; அவற்றை பாதுகாக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.
உடுமலை கச்சேரி வீதியிலுள்ள, கோர்ட் வளாக கட்டடங்கள் பழமை வாய்ந்ததாகும். இந்த வளாகத்தில், ஆலமரங்கள் நீண்ட காலமாக பராமரிக்கப்பட்டு வருகின்றன. பரந்து விரிந்து காணப்படும் இந்த ஆலமரங்கள் அரிய வகை உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது.
குறிப்பாக, இந்த மரங்களை, வாழ்விடமாகக்கொண்டு, ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தற்போதும் வசித்து வருகின்றன.
மாலை நேரத்தில், வாழ்விடமான மரங்களில் இருந்து இரை தேடி, நகரப்பகுதியில், ஆயிரக்கணக்கான வவ்வால்களை உள்ளடக்கிய கூட்டம் பறப்பது பார்ப்பவர்களை இன்றளவும் ஆச்சரியப்படுத்துகிறது. ஒவ்வொரு ஆண்டும், வவ்வால்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.
வன ஆராய்ச்சியாளர்கள் கூறியதாவது: முதுகெலும்புள்ள பாலுாட்டியில் வவ்வாலும் ஒன்று. பாலுாட்டிகளில் பறக்கும் இயல்புடையது வவ்வால் மட்டுமேயாகும்.
எலி மற்றும் நரியின் முகத்தை ஒத்தாற்போல், சிறிய முகம் இருக்கும்; கூட்டம் கூட்டமாக வாழ்பவையாகும். உடுமலை பகுதியில், அதிகளவு பழம் தின்னி வவ்வால்களே காணப்படுகிறது.
சுற்றுப்பகுதியிலுள்ள விளைநிலங்கள் மற்றும் வன எல்லையிலுள்ள மரங்களில் சென்று இரை தேடும்.
இரவில் பறக்கும் போது, 'மீயொலி' அலைகளை அனுப்பி, அந்த ஒலி அலைகள் எதிரிலுள்ள சுவர் அல்லது பொருட்களில் மோதி, திரும்ப வருவதைக்கணக்கிடும் தகவலமைப்பு திறனும் அதற்குண்டு.
இவைகள், பூச்சி, மீன், பழங்களையும் சாப்பிடும். பகல் முழுவதும் தலைகீழாகத் தன் இருப்பிடத்தில் தொங்கிக்கொண்டிருக்கும். இரவு, பல்வேறு இடங்களுக்குச்சென்று இரையைத்தேடும். பூக்களின் மகரந்த சேர்க்கைக்கும், பழ விதைகளை வெவ்வேறு இடங்களில் துாவி தாவரங்கள் பெருகுவதற்கும் வவ்வால்கள் பெரிதும் உதவுகின்றன.
பெண் வவ்வால்கள் கோடைக்காலத்தில் தான் கர்ப்பம் அடையும். சிசுவாகப் பிறக்கும் வவ்வாலுக்கு முதலில் சிறகுகள் இருக்காது.
ஆனால் பிறக்கும்போதே, பற்கள் முளைத்திருக்கும். பிறந்த இரண்டே மாதத்தில் முதிர்ச்சியுற்றுப் பறக்கவும் தொடங்கும். வவ்வால்களின் சராசரி ஆயுட்காலம், 20 ஆண்டுகள் ஆகும்.
வவ்வால்களின் இனப்பெருக்க காலத்தில், அவற்றுக்கு, இடையூறு ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும். வனத்துறை வாயிலாக தோராயமாக கணக்கெடுப்பு நடத்தி, அவற்றின் பாதுகாப்புக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.