/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருந்து தெளிப்பதில் கவனம் தேவை!
/
மருந்து தெளிப்பதில் கவனம் தேவை!
ADDED : டிச 17, 2024 09:46 PM
உடுமலை; பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் போது, பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விவசாய சாகுபடியில், பயிர்களை தாக்கும், பல்வேறு பூச்சி தாக்குதல்களை கட்டுப்படுத்த, பல வகையான மருந்துகளை விவசாயிகள் தெளிக்கின்றனர்.
இவ்வாறு, மருந்து தெளிக்கும் போது, பாதுகாப்பு அம்சங்களை முறையாக பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது:
பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியவுடன், அதன் மேலுள்ள லேபிளில், உள்ள வழிமுறைகளை, கவனமாக படிக்க வேண்டும். மருந்து தெளிப்பவர் பாதுகாப்பு உடைகளையும், கையுறை, காலணி அணிவது அவசியமாகும்.
தெளிப்பான்களை, நன்கு பரிசோதித்து, கசிவுகள் இல்லாதவாறு, சரி செய்து, சரியான இயக்கத்துக்கு, கொண்டு வர வேண்டும்.
சோப்பு, சுத்தமான தண்ணீர் ஆகியவற்றை, மருந்து தெளிக்கும் இடத்தில் வைத்து கொள்ளலாம். பூட்டிய அறையில், மருந்துகளை தெளிக்கவோ, துாவுவதோ கூடாது.
காலியான மருந்து பாட்டில்களை புதைத்து விட வேண்டும். மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ள அறைகளில், உறங்கக்கூடாது. மருந்து தெளித்தவுடன், தெளிப்பானின் மூடி மற்றும் பிளாஸ்டிக் குழாய்களை திறந்து வைப்பதால், ஈரம் உலர்ந்து விடும்.
நீர்நிலைகள், மேய்ச்சல் நிலங்களில், மருந்துகள் சேராமல், தெளிக்க வேண்டும். மருந்து தெளிக்கும் போது, காற்றின் திசையை அறிந்து அடிக்க வேண்டும். இத்தகைய வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு, அத்துறையினர் தெரிவித்தனர்.