/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாசிப்பை நேசிப்பதில் ஆர்வம் காட்டுங்க...
/
வாசிப்பை நேசிப்பதில் ஆர்வம் காட்டுங்க...
ADDED : ஜன 28, 2024 02:33 AM

'அறிவின் திறவுகோல் புத்தகங்கள்' என்பார்கள். அவ்வகையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில், 20வது புத்தக கண்காட்சி, திருப்பூர் - காங்கயம் ரோட்டில் உள்ள வேலன் ஓட்டல் வளாகத்தில் நடந்து வருகிறது. 157 ஸ்டால்களில், லட்சக்கணக்கில் புத்தகங்கள் அணிவகுத்துள்ளன.
குடும்பம், குடும்பமாக பொது மக்கள், புத்தக கண்காட்சிக்கு வந்து புத்தகங்களை வாங்கிச் செல்கின்றனர். பலர், தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்து புத்தகங்களின் அவசியம் குறித்து விளக்குகின்றனர்.
ரோகிணி, திருப்பூர்: மொபைல் போன், பேஸ்புக், வாட்ஸ் ஆப் போன்ற சமூக வலை தளங்களின் பிடியில் இருந்து பிள்ளைகளை வெளிக்கொணர்வதற்கு, புத்தகங்கள் தான் பேருதவி புரிகின்றன. கதை புத்தகங்கள், ஓவியம் தீட்டும் புத்தகங்களை குழந்தைகள் விரும்பி வாங்கு கின்றனர். புத்தகங்களை படிப்பதால் அறிவாற்றல் பெருகும் என்பதை குழந்தைகள் உணர்கின்றனர்.
செந்தில்நாதன், ஸ்ரீ விவேகானந்தா சேவாலயம்: மக்கள் கொண்டாடும் காந்தி, நேதாஜி, நேரு, அப்துல்கலாம் போன்ற பலரும், விவேகானந்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவர்கள் என்பதால், விவேகானந்தர் பற்றி அறிந்துக் கொள்ள பலரும் விரும்புகின்றனர். ஒரு ரூபாய்க்கு, விவேகானந்தரின் உபதேசம் அடங்கிய புத்தகம் எங்களிடம் உள்ளது. அவரது கொள்கைகள், வாசிப்பாளர்கள் மத்தியில் போய் சேரும் என நம்புகிறோம்.
சத்யன், திருப்பூர்: குழந்தைகளுக்கான நீதிக்கதைகள் தொடர்பான புத்தகங்களை மக்கள் அதிகம் வாங்குகின்றனர். தற்போது, அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், ராமாயண புத்தகங்களை அதிகம் கேட்கின்றனர். ராமர் படங்கள் அதிகளவில் விற்கப்படுகிறது. சமயம், ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களை, பெண்கள் அதிகம் வாங்குகின்றனர்.
பவுல் ஜெயராஜ், தமிழாசிரியர்: புத்தகங்களை பார்க்கும் போதே, மாணவ, மாணவியருக்கு, அதை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் மேலிடுகிறது. அதுவும், வரலாறு சார்ந்த புத்தகங்கள், மாணவர்களை அதிகம் ஈர்க்கின்றன. எங்கு புத்தக கண்காட்சி நடந்தாலும் சென்று பார்க்க வேண்டும்ஆவல், மாணவ, மாணவியரிடம் தெரிகிறது.
சிறைத்துறை சார்பில், 'கூண்டுக்குள் வானம்' என்ற பெயரில், புத்தகங்களை நன்கொடை பெறுவதற்கான அரங்கு அமைக்கப்பட்டிருந்தது. சிறை வார்டன்கள் கூறுகையில், 'சிறைவாசிகளுக்கு, புத்தகங்களை படிக்க கொடுக்கிறோம். குறிப்பாக, பெண் சிறைவாசிகள், நாவல், கதை புத்தகங்களை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த, இரு ஆண்டாக புத்தக கண்காட்சியில் அரங்கு அமைத்து புத்தகங்களை நன்கொடையாக பெற்று வருகிறோம். கடந்தாண்டு, புத்தக கண்காட்சியில், 4,837 புத்தகங்களை நன்கொடையாக பெற்றோம். இம்முறை, கடந்த இரு நாள் கண்காட்சியில், 20 புத்தகங்கள் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. புத்தகங்களை நன்கொடையாக வழங்குவோர், எங்களிடம் வழங்கலாம்,' என்றனர்.