/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அழகிய கையெழுத்து; அரசு ஊழியர்கள் அசத்தல்
/
அழகிய கையெழுத்து; அரசு ஊழியர்கள் அசத்தல்
ADDED : மே 01, 2025 05:32 AM

திருப்பூர் :பாரதிதாசன் பிறந்தநாளை முன்னிட்டு, அனைத்து மாவட்டங் களிலும் தமிழ் வார விழா கொண்டாட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருப்பூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் துவங்கி வரும் 5 ம் தேதி வரை தமிழ் வார விழா கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று, மாவட்ட அளவில் அனைத்து துறை சார்ந்த அரசு அலுவலர்களுக்கான கையெழுத்து மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விரு போட்டிகளிலும் அரசு அலுவலர்கள் 80 பேர் பங்கேற்றனர். தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் இளங்கோ துவக்கி வைத்தார்.
கையெழுத்து போட்டியில், அரசு அலுவலர்கள் ஆர்வமுடன் பங்கேற்று, தமிழில், நேர்த்தியாக எழுதினர். சிறப்பான வகையில் கையெழுத்து எழுதிய, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் பணிபுரியும் அருண்குமார் முதலிடம்; ஆதிதிராவிடர் நலத்துறை அபி இரண்டாமிடம்; மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் துளசிமணி மூன்றாமிடம் பிடித்தனர்.
ஆறு பேர் அடங்கிய அரசு அலுவலர்கள் ஒரு குழுவாக உருவாக்கி, மொத்தம் ஆறு குழுக் களுக்குள் வினாடி - வினா நடத்தப்பட்டது. தமிழ் மொழி வரலாறு சார்ந்த கேள்விகள் எழுப்பப்பட்டன. வினாடி - வினாவில், தேர்தல் பிரிவை சேர்ந்த சக்திவேல், முகமது ெஷரீப், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகம் அருண்குமார், மாவட்ட கல்வி அலுவலகம் சுரேஷ்குமார், கூட்டுறவு துறை விஷ்ணு, ஆதிதிராவிடர் நலத்துறை சங்கீதா ஆகிய ஆறுபேர் குழுவினர் முதலிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற அரசு அலுவலர்களுக்கு, கலெக்டர் கிறிஸ்துராஜ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் ஆகியோர், புத்தகங்கள் பரிசளித்து, பாராட்டினர். நாளை (2ம் தேதி) அரசு அலுவலர்களுக்கு பேச்சுப்போட்டி, கவிதை, புதினம் வாசித்தல், கதை சொல்லும் போட்டிகள்; 5ம் தேதி, அரசு துறை சார்ந்த கடிதம் எழுதும் போட்டிகள் நடத்தப்படுகின்றன.