ADDED : ஜூன் 25, 2025 09:21 PM
உடுமலை மின் பகிர்மான வட்டம், உடுமலை கோட்டத்தில், 17 மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒவ்வொரு பிரிவு அலுவலகங்களிலும், சராசரியாக, 4 ஆயிரம் மின் கம்பங்கள் வரை உள்ளன.
உடுமலை கோட்டத்தில், உயரழுத்த மின் வழித்தடங்களில், 45 ஆயிரம் மின்கம்பங்களும், 1,400 டிரான்ஸ்பார்மர்கள், தாழ்வழுத்த மின்வினியோக கம்பங்கள் 85 ஆயிரம் வரை உள்ளன.
உடுமலை நகரம் மற்றும் கிராமப்பகுதியிலுள்ள மின் கம்பங்களில், பிரிவு அலுவலகத்திற்கு தலா, 50 முதல், 100 மின்கம்பங்கள் வரை சேதமடைந்தும், கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு எந்நேரமும் விழும் அபாய நிலையில் உள்ளன. அதே போல், பல இடங்களில் மின் கம்பிகள் தாழ்வாக அமைந்துள்ளதும், மின் கம்பங்கள் அமைக்க பயன்படுத்தப்படும் ஸ்டே கம்பிகளாலும், விபத்துக்கள் ஏற்படுகிறது.
உடுமலை எம்.பி.,நகர், தளி ரோடு உள்ளிட்ட பகுதிகளில், மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு, நகர வளர்ச்சிக்கு ஏற்ப ரோடு விரிவாக்கம் செய்யப்படும் போது, ரோட்டிற்கு மத்தியில் மின் கம்பங்கள் அமைந்ததால், பெரும் விபத்து ஏற்படுகிறது.
புறநகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் உள்ள மின் கம்பங்கள் மற்றும் டிரான்ஸ்பார்மர்கள் பராமரிப்பு குறித்து மின் வாரிய ஊழியர்கள் கண்டு கொள்ளாததால், புதர் மண்டியும், மின் கம்பங்கள் சேதமடைந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன.
அதிகாரிகள் கூறியதாவது:
செய்திகள் மற்றும் புகார்கள் அடிப்படையில், சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்து மின் வாரியம் கவனத்திற்கு வரும் அனைத்தும் மாற்றப்படுகிறது. தேவையான மின் கம்பங்கள் இருந்தாலும், ஊழியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களினால், மின் கம்பங்கள் மாற்றுவதில் சிக்கல் ஏற்படுகிறது.
தற்போது, மின் கம்பங்களில் உள்ள மின் இணைப்புகள் கணக்கீடு எடுக்கப்படுகிறது. அப்போது, சேதமடைந்த மின் கம்பங்கள் குறித்தும் கணக்கெடுத்து, மாற்றப்படுகிறது. புற நகர பகுதிகள் மற்றும் மின் வாரியம் கவனத்திற்கு வராமல், ஏதாவது சேதமடைந்த மின் கம்பங்கள் இருந்தால், தகவல் கொடுக்கலாம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.