தேனீ வளர்ப்பை பாதிக்கும் வண்டுகள்! தோட்டக்கலைத்துறை அறிவுரை
தேனீ வளர்ப்பை பாதிக்கும் வண்டுகள்! தோட்டக்கலைத்துறை அறிவுரை
ADDED : ஆக 17, 2026 04:41 PM
உடுமலை: தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், தேன் கூடு வண்டு தாக்குதலை தவிர்க்க பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், தென்னந்தோப்புகளில் விவசாயிகள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். பொன்னேரி கிராமத்தில், தேனீ வளர்ப்பு குறித்து வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வக்குமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.
அப்போது, தேனீ கூடுகளை தாக்கும் சிறு தேன்கூடு வண்டு தாக்குதல் இருப்பது கண்டறியப்பட்டது.
தோட்டக்கலைத்துறையினர் கூறியதாவது: தேனீக்கூடுகளில், சிறு தேன் கூடு வண்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த தாக்குதலை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வளர்ந்த வண்டு சுமார், 5 முதல் 7 மி.மீ., நீளம் கொண்டதாகவும், அதன் புழுக்கள் வெள்ளை நிறத்தில் காணப்படும். தேன்கூட்டின் அடிப்பகுதி, சட்டங்களின் இடுக்குகள் உள்ளிட்ட தேனீக்கள் செல்ல முடியாத சிறிய இடங்களில், இந்த வண்டுகள் மறைந்து காணப்படும்.
தாக்குதல் ஏற்பட்ட தேன்கூடு மற்றும் தேனில் பிசுபிசுப்பான தன்மை, ஆரஞ்சு அல்லது பழுப்பு நிறக்கழிவுகள், புளித்த தேன் போன்றவற்றால் துர்நாற்றம் ஏற்படுதல் முக்கிய அறிகுறிகளாகும்.
கடுமையான தாக்குதல் ஏற்பட்டால் தேன் புளித்து திரவமாக மாறுவதுடன், தேனீக்கள் கூட்டை விட்டு வெளியேறும் நிலையும் ஏற்படலாம்.
தடுப்பு நடவடிக்கைகள் தேன்கூடுகளை, 7 முதல் 10 நாட்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும். பலவீனமான தேனீக்கூடுகளை உடனடியாக வலுப்படுத்தி, தேனீக்கள் கூட்டை நன்கு பாதுகாக்கும் வகையில் தேவையற்ற காலி இடங்களை குறைக்க வேண்டும்.
சேதமடைந்த தேன்கூடுகள், மெழுகுத்துண்டுகள், தேன் மற்றும் மூடியிலுள்ள கழிவுப்பொருட்களை கூட்டைச் சுற்றி குவித்து வைக்கக்கூடாது.
தேன் எடுக்கப்பட்ட சட்டங்களை நீண்ட நேரம் திறந்த நிலையில் வைக்காமல், மீதமுள்ள தேன் மற்றும் கூடுதல் மெழுகு ஆகியவற்றை உடனடியாக அகற்றி, தேன்கூட்டின் இடுக்குகளை மூட வேண்டும்.
தேன்கூட்டைச் சுற்றியுள்ள மண்ணை சுத்தமாக வைத்திருப்பதுடன், நல்ல வடிகால் வசதியையும் ஏற்படுத்த வேண்டும். மண்ணில் வெப்பம் மற்றும் புண்ணாக்கு இடுவதன் வாயிலாக, புழுக்கள் கூட்டுப்புழுக்களாக மாறுவதைத் தடுக்கலாம். தேன்கூடுகள் சூரிய வெளிச்சம் படும் வகையில் அமைக்கப்பட வேண்டும்.
பிசுபிசுப்பான அல்லது சேதமடைந்த தேன்கூடு சட்டங்களை தனியாக அகற்றி அழிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கூட்டுகள், சட்டங்கள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்களை வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லக்கூடாது. அருகிலுள்ள தேன்கூடுகளையும் உடனடியாகப் பரிசோதிக்க வேண்டும்.
இவ்வாறு, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்தனர்.
