/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தென்னையில் பரவும் வண்டு தாக்குதல்! தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு
/
தென்னையில் பரவும் வண்டு தாக்குதல்! தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு
தென்னையில் பரவும் வண்டு தாக்குதல்! தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு
தென்னையில் பரவும் வண்டு தாக்குதல்! தோட்டக்கலைத்துறையினர் ஆய்வு
ADDED : பிப் 12, 2025 11:16 PM

உடுமலை; காண்டாமிருக வண்டு தாக்குதலை தடுக்க, கவர்ச்சி பொறி அமைத்தல் உள்ளிட்ட வழிமுறைகளை, விவசாயிகள் பின்பற்றலாம் என, குடிமங்கலம் வட்டார தோட்டக்கலைத்துறையினர் நேரடி ஆய்வின் போது, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
குடிமங்கலம் வட்டாரத்தில், 14,850 ெஹக்டேர் பரப்பளவில், பிரதான பயிராக தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இச்சாகுபடியில் ஏற்படும் நோய்த்தாக்குதல் குறித்து, தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் குழு, புக்குளம், வீதம்பட்டி, இலுப்பநகரம் மற்றும் பூளவாடி கிராமங்களில் ஆய்வு செய்தனர்.
இதில், வெள்ளை ஈ, காண்டாமிருக வண்டு, கேரளா வேர் வாடல் நோய் மற்றும் தஞ்சாவூர் வாடல் நோய்த்தாக்குதல் பரவலாக இருப்பது கண்டறியப்பட்டது.
இத்தகைய நோய்த்தாக்குதலை கண்டறிந்து, பின்பற்ற வேண்டிய மேலாண்மை முறைகள் குறித்து, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் செல்வகுமார் விவசாயிகளிடம் பேசியதாவது:
தென்னை சாகுபடியில், காண்டாமிருக வண்டு தாக்குதல் காணப்படுகிறது. இளம் மற்றும் வளரும் கன்றுகளை இந்தவண்டுகள் பெருமளவில் தாக்கும்.
விரியாத மட்டைகள், குருத்துப்பகுதி, அடி மட்டை மற்றும் தென்னம்பாளைகளில், துளைகள் இருக்கும். தாக்கப்பட்ட ஓலைகள் விரிந்தவுடன், முக்கோண வடிவில்வெட்டியது போல காணப்படும்.
சேதமடைந்த பகுதியில் மரசக்கைகள் காணப்படும். அதிகளவில் பாதிக்கப்பட்ட மரங்களின் குருத்து வளைந்தும், சுருண்டும் காணப்படும்.
எருக்குழியில் காணப்படும் புழு மற்றும் கூட்டுப்புழுக்களை சேகரித்து அழிக்க வேண்டும். எருக்குழியில் வளர்ந்து வரும் புழுக்களை அழிக்க மழைக்காலங்களில், ஒரு கிலோ மெட்டாரைசியம் பூஞ்சானத்தை நீரில் கரைத்து, குழி அமைத்து எருக்குழியில், 4 அல்லது 5 இடங்களில் ஊற்றி அழிக்கலாம்.
வேப்பங்கொட்டை துாள் 50 கிராம் மற்றும் 100 கிராம் காய்ந்த மணலுடன், 6 கிராம் குளோராண்ட்ரானிலிபுரோல் குருணை மருந்தை, 250 கிராம் காய்ந்த மணலுடன் கலந்து நடுக்குருத்து பகுதியில் துாவி விட வேண்டும்.
ஒரு ெஹக்டேருக்கு, ஒரு ரைனோலியூர் கவர்ச்சி பொறியை வைத்து வண்டுகளை கவர்ந்து அழிக்கலாம்.
இத்தகைய நோய்த்தாக்குதல் தென்பட்டால், வட்டார வேளாண் விரிவாக்க மையத்தையோ, சம்பந்தப்பட்ட உதவி தோட்டக்கலை அலுவலர்களை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.
இவ்வாறு, அவர் பேசினார்.
ஆய்வின் போது, துணை தோட்டக்கலை அலுவலர் சிவானந்தன் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் உடனிருந்தனர்.