ADDED : அக் 07, 2024 01:13 AM

வன உயிரின வாரத்தை முன்னிட்டு, நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கீடு பணியை, அரசு கல்லுாரி மாணவ, மாணவியர் துவக்கியுள்ளனர்.
திருப்பூர் வனத்துறை, ஆனைமலை புலிகள் காப்பகம், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்டம் அலகு - 2 சார்பில், தேசிய வன உயிரின வார தினம் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, எஸ்.பெரியபாளையத்தில் உள்ள நஞ்சராயன் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் கணக்கீடு செய்யும் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார்.
திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணன் பங்கேற்று பேசுகையில், ''ஒவ்வொரு ஆண்டும், அக்., 2 முதல், 8ம் தேதி வரை தேசிய வனஉயிரின வாரம் கொண்டாடப்பட்டு வருகிறது. வனஉயிரினங்களை காப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இவ்வாரத்தின் நோக்கம்,'' என்றார்.
மாணவ, மாணவிகளை மூன்று குழுக்களாக பிரிந்து, வனக்காப்பாளர் மற்றும் சரக பணியாளர்கள் மேற்பார்வையில் பல்வேறு வகையான பறவைகளை கண்டறியும் பயிற்சி துவங்கியது.
மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, கோகுல்ராம், ஜெயலட்சுமி, ரூபினா, அமுதா ஆகியோர்கள் தலைமையில், கூழைக்கிடா, வயல் நெட்டைகாலி, வெள்ளை நாமக்கோழி, மஞ்சள் மூக்கு நாரை, பவளக்கால் உள்ளான், பாம்புத்தாரா, பனங்காடை, சுடலைக்குயில், அரிவாள் மூக்கன், நீலக்கன்னி, மஞ்சள் ஆட்காட்டி பறவை, கரண்டிவாயன் உள்ளிட்ட, 60 பறவை இனம் கண்டுபிடிக்கப்பட்டு, குறிப்பெடுக்கப்பட்டது. வனவர் திருமூர்த்தி, வனகாப்பளர்கள் பங்கேற்றனர்.
