ADDED : செப் 23, 2024 06:42 AM

திருப்பூர் : திருப்பூரில், ஊர்வலத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக போலீசாரை கண்டித்து பாரதிய மஸ்துார் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாரதிய மஸ்துார் சங்கம் சார்பில், விஸ்வகர்மா ஜெயந்தியையொட்டி தேசிய தொழிலாளர் தின விழா ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் திருப்பூரில் நேற்று மாலை நடந்தது. முன்னதாக, மாநகராட்சி சந்திப்பில் இருந்து பொதுக்கூட்டம் நடந்த இடத்துக்கு மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் தலைமையில் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் பெருமாள் கோவிலை நோக்கி சென்று கொண்டிருந்தது. போலீசார் போக்குவரத்தை சில நிமிடங்கள் நிறுத்தி வைத்திருந்தனர்.
ஊர்வலம் முடியும் முன், போக்குவரத்தை திறந்து விட்டனர். அப்போது, ஊர்வலத்தில் சென்றவர்கள் விரைந்து செல்லவும், ஓரமாக செல்லவும் நிர்வாகிகள் சிலரை கை வைத்து போலீசார் தள்ளினர். அதில், மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ் தடுமாறினார். இதை பார்த்த அமைப்பு நிர்வாகிகள், ஊர்வலம் முடியும் முன்பு, எதற்கு போக்குவரத்தை திறந்து விட்டீர்கள் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசாரை கண்டித்து சாலை மறியலில் அமர்ந்தனர்.
பின், போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைய வைத்தனர். இதனால், அப்பகுதியில் கொஞ்சம் நேரம் பரபரப்பு ஏற்பட்டது.