தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்

ரத்ததான முகாம்


ADDED : ஏப் 19, 2026 11:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 11:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ரத்த தானம்பெருமாநல்லுார்;திருப்பூர் 'முயற்சி மக்கள் அமைப்பு' சார்பில், அரசு மருத்துவமனைக்காக ரத்ததான முகாம் நடந்தது.

பெருமாநல்லுார் அருகே உள்ள இன்டிகாட் குளோபல் எக்ஸ்போர்ட் நிறுவனத்தில் நடைபெற்ற முகாமில், நிறுவனத்தின் உரிமையாளர், மேலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் என ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

முதல் கட்டமாகத் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் பங்கேற்று 30 யூனிட் ரத்தத்தைச் சேகரித்தனர்.

அதே நிறுவனத்தின் மற்றொரு பிரிவில் நடைபெற்ற முகாமில், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவக் குழுவினர் 30 யூனிட் ரத்தத்தைச் சேகரித்தனர்.

ரத்ததானம் வழங்கிய தொழிலாளர்களுக்கு நிறுவன உரிமையாளர் செந்தில்குமார் சான்றிதழ்களை வழங்கிப் பாராட்டினார்.

ஏற்பாடுகளை முயற்சி மக்கள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

---

மே. வங்க தேர்தல்: ரயில்கள் ஹவுஸ்புல்

திருப்பூர்: மேற்கு வங்கத்தில் முதல்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், நேற்று முதலே அம்மாநிலம் செல்லும் ரயில்கள் அதிகளவில் பயணிகள் பயணிக்க துவங்கினர்.

மொத்தம், 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட, மேற்கு வங்க மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் வரும், 23ம் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கோவை, திருப்பூரை கடந்து மேற்கு வங்க மாநிலத்தின் ஹவுரா, ஜல்பைகுரி, கொல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ரயில்களில் நேற்றே கூட்டம் அதிகரித்தது.

நேற்று மதியம் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வந்த ஆலப்புழா - தன்பாத் ரயிலில் பயணிக்க, பிளாட்பார்மில் அதிகளவில் பயணிகள் காத்திருந்தனர். ரயிலின் பொது பெட்டிகளில் ஏற பலரும் முண்டியடித்தனர். இன்றும், நாளையும் கூடுதலாக பயணிகள் ரயிலில் மேற்கு வங்க மாநிலத்துக்கு பயணிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.

--

குதிரை சிலையை தோளில் சுமந்த இளைஞர்கள்

அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, வரும் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் துவங்க உள்ளது.

இதையொட்டி, அவிநாசி அருகே உள்ள பெரியகருணை பாளையம் கிராம மக்கள் தங்களின் பாரம்பரிய நேர்த்திக்கடனைச் செலுத்தினர்.

அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள வேலாயுதம்பாளையம் ஊராட்சி, ராயன் கோவில் காலனி பகுதியில் அமைந்துள்ள ஆகாசராயர் கோவிலுக்குச் செல்ல, பெரியகருணை பாளையத்தைச் சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டனர்.

மலர்களால் அழகாக அலங்கரிக்கப்பட்ட குதிரை சிலையை ஒரு பிரத்யேகச் சப்பரத்தில் கட்டி, அதனை அப்பகுதி இளைஞர்கள் தங்களின் தோள்களில் சுமந்தபடி ஊர்வலமாகச் சென்றனர்.

பெரியகருணை பாளையம் ஸ்ரீ மகாசக்தி மாரியம்மன் கோவிலில் இருந்து புறப்பட்ட இந்த ஊர்வலம் மங்கலம் சாலை, சேலம் - - கோவை பைபாஸ் சாலை மற்றும் ராயன் கோவில் காலனி வழியாகச் சென்றது. வழிநெடுகிலும் சப்பரத்தைச் சுமந்து வந்த இளைஞர்களுக்குப் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வெயிலின் தாக்கம் தெரியாமல் இருக்க, ஆங்காங்கே இளைஞர்கள் மீது தண்ணீர் ஊற்றியும், அவர்களுக்குக் குடிநீர், மோர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கியும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர்.

ஊர்வலமாக ஆகாசராயர் கோவிலைச் சென்றடைந்த பக்தர்கள், அங்குச் சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர். தொடர்ந்து ஆகாசராயருக்குப் பொங்கல் வைத்து, சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. ஐவர் அன்னதானக் குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

---

ஓட்டுப்பதிவுக்காக தயார் நிலை

திருப்பூர்: ஜனநாயக திருவிழாவின் முக்கிய நிகழ்வான, ஓட்டுப்பதிவு வரும் 23 ம் தேதி நடைபெறுகிறது.

நுாறு சதவீத ஓட்டுப்பதிவு இலக்கை அடையவேண்டும் என்கிற இலக்குடன், ஓட்டுப்பதிவு பணிகளில் ஈடுபட, தேர்தல் பணியாளர்கள், போலீசார் உள்பட 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தயார் நிலையில் உள்ளனர்.

சட்டசபைத் தேர்தல் வரும் 23ல் நடக்கிறது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளிலும் தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் முடித்துள்ளது.

நுாறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கை எட்ட 16 ஆயிரம் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் மொத்தம் 116 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தொகுதி வாரியாக: திருப்பூர் தெற்கு (24), திருப்பூர் வடக்கு (15), பல்லடம் (15), காங்கயம் (15), அவிநாசி (14), மடத்துக்குளம் (13), உடுமலை (11), தாராபுரம் (9).

வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் அறிக்கைகளை முன்வைத்து, கோடை வெயிலையும் மிஞ்சும் வகையில் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் 1,112 மையங்களில் மொத்தம் 2,822 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சி.சி.டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்டறியப்பட்டுள்ள 129 பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. 2 ஆயிரம் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். தொகுதிக்கு ஒன்று வீதம் 8 'பிங்க்' நிற மகளிர் வாக்குச்சாவடிகள் பிரத்யேகமாக அழகுபடுத்தப்பட்டுத் தயார் செய்யப்பட்டுள்ளன.

வாக்கு இயந்திரங்கள் தயார் வாக்குப்பதிவுப் பணிகளைச் சீராக நடத்த 8 தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 307 மண்டல அலுவலர்கள், 10,170 வாக்குப்பதிவு அலுவலர்கள் எனப் பெரும் பட்டாளமே களமிறக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு மூன்று கட்டப் பயிற்சிகள் அளித்து முடிக்கப்பட்டுள்ளன.

3,729 பேலட் யூனிட்கள், 3,383 கன்ட்ரோல் யூனிட்கள் மற்றும் 3,666 விவிபேட் இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன.

மாவட்டத்தில் மொத்தம் 19,83,882 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் (10,26,453) ஆண்களை (9,57,453) விட அதிக எண்ணிக்கையில் உள்ளனர். திருநங்கைகள் 251 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கு வீடு தேடிச் சென்று தபால் வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

வரும் 23-ம் தேதி காலை 6:00 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடைபெறும். காலை 7:00 முதல் மாலை 6:00 மணி வரை பொதுமக்கள் வாக்களிக்கலாம்.

வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள 12 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காட்டி வாக்களிக்கலாம்.

குண்டூசி முதல் மை வரை 80 வகையான பொருட்கள் அடங்கிய பைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. இவை 22-ம் தேதி வாக்குச்சாவடி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்படும்.

---

ஜெ. கொள்கைக்கு எதிராக

அ.தி.மு.க. கூட்டணி: மா.கம்யூ.

திருப்பூர்:

திருப்பூர் தெற்கு மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும், தி.மு.க., வேட்பாளர்களைஆதரித்து, அவர் நேற்று பிரசாரம் செய்தார். திருப்பூர் காட்டுவளவு பகுதியில், மா.கம்யூ., சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டம் நடந்து.

கூட்டத்தில், விஜூ கிருஷ்ணா பேசியதாவது:

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாமல், பா.ஜ., அரசு மக்களை ஏமாற்றி வருகிறது. வடமாநிலங்களில் இருப்பது போல், தமிழகத்தை மாற்ற முயற்சிக்கின்றனர். உலக அளவில், அதிக விருதுகளை பெறும் அளவுக்கு கேரளாவில் ஆட்சி நடக்கிறது. அண்ணாதுரை மற்றும் ஜெயலலிதா, கொள்கைக்கு எதிராக அ.தி.மு.க., கூட்டணி அமைத்துள்ளது. மத்திய அரசின் சில திட்டங்களால், திருப்பூர் பின்னலாடை தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.

குறு. சிறு தொழில்துறையினரும், தொழிலாளரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நடிகர் விஜய், சினிமாவில் ஹீரோவாக இருக்கிறார்; ஆனால், தேர்தல் பிரசாரத்தில், மக்கள் பூக்களை வீசும் போது, ஓடிச்சென்று வேனில் மறைந்து கொள்கிறார். இப்படி அச்சப்பட்டு ஓடும் விஜய், எப்படி தமிழக மக்களை காப்பாற்ற முடியும்? பா.ஜ.வை எதிர்க்கும் தளபதியாக எப்படி இருக்க முடியும்? மாநில மக்களின் உரிமையை பாதுகாக்க, இத்தேர்தலில், தி.மு.க.வை ஆதரிக்க வேண்டும்.

--

கார் மோதி வாலிபர் பலி

திருப்பூர்: தேனி மாவட்டம், கம்பத்தை சேர்ந்தவர் வீரமணி, 28. காங்கயம் - கரூர் ரோட்டில் வீரணம்பாளையத்தில் நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடந்தார். அவ்வழியாக வந்த கார் வாலிபர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

லாரி விபத்து நேற்று காலை கரூரில் இருந்து கோவை நோக்கி சிமென்ட் கலவை ஏற்றி கொண்டு லாரி சென்று கொண்டிருந்தது. சேலத்தில் இருந்து சிமென்ட் மூட்டை ஏற்றி கொண்டு உடுமலை நோக்கி சென்றது. காங்கயம் ரவுண்டானா வந்த போது, முந்தி செல்வதில் ஏற்பட்ட போட்டியில், இரண்டு லாரிகளும் மோதி ரோட்டில் கவிழ்ந்தன. ரோட்டில் இருந்த மின்கம்பம் சேதமடைந்து மின்தடை ஏற்பட்டது. விபத்து காரணமாக, ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

---

மீன் வரத்து குறைந்தது

விற்பனையும் மந்தம்

திருப்பூர்: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்துள்ளதாலும், நேற்று கிருத்திகை என்பதால் அசைவ உணவைத் தவிர்த்ததாலும் திருப்பூரில் மீன் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் காரணமாக, தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு வழக்கமாக வரும் 50 டன் கடல் மீன் வரத்து, நேற்று பாதியாக குறைந்தது. வரத்து குறைந்ததால் மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

விலை நிலவரம் (கிலோவில்): வஞ்சிரம் - ரூ.980, கடல் பாறை - ரூ.600, விளாமீன் - ரூ.500, இறால் - ரூ.450, ஊழி - ரூ.380, சங்கரா - ரூ.350, நண்டு - ரூ.350, நெத்திலி - ரூ.220, மத்தி - ரூ.140.

மீன் விலை கடந்த வாரத்தை விடப் பெரிய அளவில் உயராவிட்டாலும், நேற்று 'சித்திரை கிருத்திகை' என்பதால் வாடிக்கையாளர் வருகை மிகக் குறைவாகவே இருந்தது. மதியத்திற்குப் பிறகும் மீன்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்ததால் வியாபாரிகள் கவலையடைந்தனர்.

---

ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு

பெண்கள் கபடிப்போட்டி

திருப்பூர்: சட்டசபை தேர்தலில், நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்து, திருப்பூரில், வாக்காளர் விழிப்புணர்வு பெண்கள் கபடி போட்டி நடந்தது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (திருப்பூர் பிரிவு) மற்றும் திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடி சார்பில், சட்டசபை தேர்தலில், நுாறு சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த வாக்காளர் விழிப்புணர்வு பெண்கள் கபடி போட்டி திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மஹாலில் நேற்று நடந்தது. கலெக்டர் மனிஷ் நாரணவரே போட்டியை துவைக்கி வைத்தார். தொடர்ந்து, ஓட்டளிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சங்கமித்திரை, மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார், கபடி கழக செயலாளர் ஜெயசித்ரா சண்முகம் உட்பட கபடி கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

---

திருப்பூர் 2.0- தீர்வு காணப்பட வேண்டிய பிரச்னைகள்

திருப்பூர்:

தமிழகப் பொருளாதாரத்தின் இதயத் துடிப்பான திருப்பூர், இன்று திட்டமிடப்படாத வளர்ச்சியால் மூச்சுத் திணறி வருகிறது. 60 வார்டுகள், 14 லட்சம் மக்கள் என விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த மாநகரம், மூன்று சட்டசபை தொகுதிகளுக்குள் (வடக்கு, தெற்கு, பல்லடம்) பிரிந்துள்ளது.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும் புதிய எம்.எல்.ஏ-க்களிடம் மக்கள் எதிர்பார்ப்பது வெற்று அறிக்கைகளை அல்ல; திருப்பூரின் தலையெழுத்தை மாற்றும் அதிரடி மாற்றங்களைத்தான்!

1. போக்குவரத்துமுகவரி மாறுமா? திருப்பூரின் சாபக்கேடாக மாறிவிட்ட 'டிராபிக் ஜாம்' ஒட்டுமொத்த நகரின் வேகத்தையும் முடக்குகிறது. 5 லட்சம் வாகனங்கள் செல்லும் சாலைகள், ஆம்புலன்ஸ் கூடச் செல்ல முடியாத நிலையில் உள்ளன.

தீர்வு: அரசியல் சமரசமின்றிச் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். முக்கியச் சந்திப்புகளில் 'பறக்கும் பாலங்கள்' அமைப்பதை இனியும் தள்ளிப்போடக் கூடாது. பெயரளவு 'பேட்ச் ஒர்க்'கை விடுத்து, தரமான கான்கிரீட் சாலைகளை அமைக்க வேண்டும்.

2. 24 மணி நேர பஸ் சேவை இரவு பகல் பாராமல் இயங்கும் இந்தத் துாங்கா நகரத்தில், நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் தொழிலாளர்களுக்குப் பேருந்து வசதி என்பது கானல் நீராகவே உள்ளது.

தீர்வு: ஷிப்ட் முறையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நள்ளிரவு நேரச் சிறப்புப் பேருந்துகளை இயக்க வேண்டும். பல்லடம், அவிநாசி போன்ற புறநகர்ப் பகுதிகளையும் இணைக்கும் 'பீடர் பஸ்' வசதிகளை அறிமுகப்படுத்த வேண்டும்.

3. வரிக்கேற்ப வசதிகள் இல்லையே! மாநகராட்சியை விரிவுபடுத்துவது வரி வசூலுக்காக மட்டுமே இருக்கக் கூடாது. ஏற்கனவே இணைக்கப்பட்ட வார்டுகளிலேயே முறையான வடிகால், சாலை வசதிகள் இல்லை.

தீர்வு: புதிய பகுதிகளை இணைக்கும் முன் விரிவான கள ஆய்வு தேவை. பாதாளச் சாக்கடை, குடிநீர் இணைப்பு என அனைத்துப் பணிகளையும் 100 சதவீதம் முடித்த பிறகே வரியை உயர்த்த வேண்டும். 'கோப்பு'களில் வளர்வதல்ல நகரம்; செயல்பாடுகள் மூலம் வளரும் வசதிகளே முக்கியம்.

4. தெற்கிலும் அமையுமா இ.எஸ்.ஐ.? தற்போதுள்ள இ.எஸ்.ஐ மருத்துவமனை நகரின் வடக்கு எல்லையில் (பூலுவப்பட்டி) இருப்பதால், தெற்குப் பகுதி தொழிலா ளர்கள் சிகிச்சை பெற ஒரு நாள் முழுவதையும் செலவிட வேண்டியுள்ளது.

தீர்வு: தெற்குப் பகுதி அல்லது அதன் எல்லைப் பகுதியை உள்ளடக்கிய காங்கயம்/தாராபுரம் சாலைப் பகுதிகளில் நவீன வசதிகளுடன் கூடிய புதிய இ.எஸ்.ஐ மருத்துவமனையை மத்திய-மாநில அரசுகள் இணைந்து அமைக்க வேண்டும்.

5. மாநகராட்சிக்கென தனி கல்வி அலுவலர் அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகள் இன்று நிர்வாகச் சிக்கல்களால் பொலிவிழந்து வருகின்றன. பள்ளிக் கல்வித்துறைக்கும் மாநகராட்சிக்கும் இடையிலான அதிகாரப் பிரிவினை பராமரிப்புப் பணிகளை முடக்குகிறது.

தீர்வு: மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அனைத்துப் பள்ளிகளையும் மாநகராட்சியின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, ஒரு 'தனி கல்வி அலுவலரை' நியமிக்க வேண்டும். தனியார் பள்ளிகளுக்கு இணையாக 'ஸ்மார்ட் கிளாஸ்' மற்றும் நவீன ஆய்வகங்களை உருவாக்க வேண்டும்.

6. துாங்கிக்கிடக்கும் வணிக வளாகங்கள் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பல வணிக வளாகங்கள், அரசியல் தலையீடுகள் மற்றும் ஏலச் சிக்கல்களால் இன்று 'பேய் பங்களா'க்களாகப் பாழடைந்து வருகின்றன.

தீர்வு: வெளிப்படையான இணையவழி ஏல முறையை அமல்படுத்தி, பூட்டிக் கிடக்கும் வளாகங்களை உடனடியாகச் செயல்பாட்டிற்குத் தர வேண்டும். இதன் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயைக் கொண்டு நகரின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாம்.

7. திடக்கழிவு மேலாண்மை சிறக்குமா? மலைபோலக் குவியும் குப்பைகளும், அடிக்கடி ஏற்படும் தீ விபத்துகளும் திருப்பூரின் ஆரோக்கியத்தை அச்சுறுத்துகின்றன.

தீர்வு: குப்பைகளை வெறும் நிலத்தில் கொட்டாமல், எரித்து மின்சாரம் அல்லது உயிரி எரிவாயு தயாரிக்கும் நவீன ஆலைகளை நிறுவ வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் சிறுதொழில் கூடங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.

8. மேஜை மீது கோப்புகள் துாங்கலாமா? அடிப்படைத் தேவைகளுக்காகவும், புகார்களுக்காகவும் மக்கள் அதிகாரிகளின் பின்னால் மாதக்கணக்கில் அலைய வேண்டிய அவலம் நீடிக்கிறது.

தீர்வு: வார்டு வாரியாக மக்கள் குறை கேட்கும் கூட்டங்களை மாதந்தோறும் கட்டாயமாக்க வேண்டும். புகார்கள் 48 மணி நேரத்திற்குள் தீர்க்கப்படுவதைக் கண்காணிக்க எம்.எல்.ஏ-க்களுக்குத் தனி 'டேஷ்போர்டு' வசதி செய்யப்பட வேண்டும்.

9. வியாபாரிகளுக்குஎட்டாக்கனியாக ஏலங்கள் சந்தை மற்றும் வணிக வளாக ஏலங்களில் அரசியல் புள்ளிகள் 'சிண்டிகேட்' அமைத்துச் சுரண்டுவதால், மாநகராட்சிக்கு நிதி இழப்பும், சிறு வியாபாரிகளுக்குப் பாதிப்பும் ஏற்படுகிறது.

தீர்வு: 100 சதவீத இணையவழி ஏல முறையைக் கொண்டு வர வேண்டும். குறிப்பிட்ட சதவீதக் கடைகளைச் சிறு வியாபாரிகளுக்கு நேரடியாக ஒதுக்கீடு செய்து, அரசியல் தலையீடுகளை வேரறுக்க வேண்டும்.

10. ஸ்மார்ட் சிட்டி:பெயரில் மட்டும் போதாது பல கோடி ரூபாய் செலவில் மணிக்கூண்டு கட்டுவது மட்டுமே 'ஸ்மார்ட் சிட்டி' அல்ல. மழை பெய்தால் மூழ்கும் சாலைகள் இருக்கும் வரை நகரம் ஸ்மார்ட் ஆக முடியாது.

சவால்: நிலுவையில் உள்ள அனைத்துத் திட்டங்களையும் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும். பெயரில் மட்டுமே 'ஸ்மார்ட் சிட்டி' என்று இல்லாமல், செயல்பாட்டில் ஒரு சர்வதேசத் தரத்திலான நகரமாகத் திருப்பூரை மாற்றுவதே புதிய மக்கள் பிரதிநிதிகளுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால்!

கோட்டையில் அமர்ந்து: கோரிக்கைகளை சாதிப்பரா?: திருப்பூரின் பொருளாதாரச் சக்கரம் சுழல வேண்டுமானால், அதன் உள்கட்டமைப்பு பலப்பட வேண்டும். வெற்றிபெறும் வேட்பாளர்கள் கோட்டையில் அமர்ந்து கோரிக்கைகளைச் சாதித்துக் காட்ட வேண்டிய தருணம் இது!

---

வாக்காளருக்கு பண மழை

திருப்பூர்: சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், திருப்பூரில் 'பணப்பட்டுவாடா' சூடுபிடித்துள்ளது. வாக்காளர்களைக் கவனிக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வினர் பட்டியலுடன் களமிறங்கியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய நான்கு கட்சிகளுக்கிடையே பலப்பரீட்சை நிலவுகிறது.

இந்த முறை, சிறுபான்மையினர் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் சிதற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதை தடுக்கவும், தங்களின் வாக்கு வங்கியைத் தக்கவைக்கவும் 'வைட்டமின் ப' வினியோகத்தை இரு திராவிடக் கட்சிகளும் கையில் எடுத்துள்ளன.

பட்டுவாடா துவக்கம் அ.தி.மு.க.: அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி செலவுகளுக்கு ஏற்கனவே நான்கு கட்டங்களாகப் பணம் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நான்காம் கட்டமாக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்ட நிலையில், இன்று 20 ஆயிரம் ரூபாய் வரை ஐந்தாம் கட்டப் பட்டுவாடா நடைபெறவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

தி.மு.க.: தி.மு.க. தரப்பிலும் பூத் கமிட்டிகளுக்கு நிதி ஒதுக்கீடு ஜோராக நடந்து வருகிறது. கூட்டணி கட்சி போட்டி யிடும் திருப்பூர் வடக்குத் தொகுதியில் மட்டும் தொய்வு நிலவினாலும், மற்ற இடங்களில் ஆதரவு வாக்காளர்களை 'கவர்' செய்யும் பணி முழுவீச்சில் தொடங்கிவிட்டது.

பணம் வினியோகம் செய்யப்படுவதை அறிந்தால், ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் ஒப்படைக்க அந்தந்தப் பகுதிகளில் ரகசியக் கண்காணிப்பை த.வெ.க.வினர் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைக்குஅச்சமில்லை அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், எவ்வளவுதான் சோதனைகள் இருந்தாலும், தெருவில் உள்ள தங்களுக்குத்தெரிந்த நபர்கள் மூலம் பணத்தைச் சேர்த்திட தி.மு.க. - அ.தி.மு.க என இரு கட்சிகளும்தெளிவாகத் திட்டமிட்டுள்ளன.

ஒரு வாக்காளருக்கு ஆயிரம் ரூபாய் வரை முதல்கட்டமாக ஒவ் வொரு கட்சிகளும் வினியோகிக்கின்றன. போட்டியின் தன்மையைப் பொறுத்து, இது அதிகரிக்கவும் செய்யலாம் என்கின்றனர் கட்சியினர்.

குறிப்பாக, 'விசில்' சத்தம் அதிகமாகக் கேட்கும் பகுதிகளில் கூடுதல் 'கவனிப்பு' இருக்கலாம். நேற்று இரவில் துவங்கிய பட்டுவாடா 22ம் தேதி மாலை வரை விறுவிறுப்பாக நடக்கும். என்றனர்.

தேர்தல் களம் இப்போது ஜனநாயகத்திருவிழாவிலிருந்து'பணத் திருவிழாவாக' உருமாறியுள்ளது.

ஓட்டுச்சாவடி பொருட்கள் தயார்

திருப்பூர், ஏப். 20- திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள 289 வாக்குச்சாவடிகளில், சுமார் 1.97 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கான தேர்தல் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கடந்த மூன்று நாட்களாக வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. விடுபட்ட வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு நாளன்று அந்தந்தச் சாவடிகளில் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் புகைப்படம் மற்றும் சின்னம் பொருத்தும் பணி நிறைவடைந்து, அவை தற்போது 'ஸ்ட்ராங் ரூமில்' பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டுள்ளன.

அழியாத மை, வாக்காளர் பட்டியல், எழுதுபொருட்கள், படிவங்கள் மற்றும் உறைகள் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் நேற்று தயார் செய்யப்பட்டன.

டவுன்ஹால் அரங்கில் நடைபெற்ற இப்பணிகளைத் தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அமித் நேரில் ஆய்வு செய்தார். இந்தப் பொருட்கள் அனைத்தும் தேர்தலுக்கு முந்தைய நாள் அந்தந்த வாக்குச்சாவடி தலைமை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.

---

ஓட்டுச்சாவடி பொருட்கள் பிரித்துவைத்து சரிபார்க்கும் பணி நடந்தது. இதை தெற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us