/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது படகுக்குழாம்
/
சுற்றுலா பயணியரை ஈர்க்கிறது படகுக்குழாம்
ADDED : அக் 24, 2025 12:17 AM
திருப்பூர்: திருப்பூர் ஆண்டிபாளையம் குளம், சுற்றுலா பயணியரை ஈர்க்கத் துவங்கியிருக்கிறது. தீபாவளி தொடர் விடுமுறையின்போது, 5 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
திருப்பூர் - மங்கலம் ரோட்டில், 58 ஏக்கர் பரப்பளவில் ஆண்டிபாளையம் குளம் அமைந்திருக்கிறது. மங்கலம் நல்லம்மன் தடுப்பணை மற்றும் ஒட்டணையிலிருந்து இக்குளத்துக்கு தண்ணீர் வருகிறது. ஆண்டு முழுதும் தண்ணீர் தேங்கி ரம்மியமாக காட்சியளிக்கிறது. குளத்தின் நடுவே உள்ள திடல்களில், அடர்ந்து வளர்ந்துள்ள மரம், செடி, கொடிகளில் பல்வேறு வகை பறவைகளும் வந்து செல்கின்றன.
மாநகரில் அமைந்த
இயற்கைச்சூழல்
மாநகரையொட்டி இயற்கையாய் அமைந்துள்ள இக்குளம், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மாவட்ட சுற்றுலா துறையின் முயற்சியால், 1.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில், படகு குழாம் அமைக்கப்பட்டு, படகு சவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு இல்லத்தின் முகப்பில் பூங்கா, டிக்கெட் கவுன்டர், அதையொட்டி, சிறுவர்கள் விளையாட உபகரணங்களுடன் கூடிய திடல் ஆகிய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. படகு இல்ல அலுவலகத்தின் மேல் தளத்தில் திறந்தவெளி உணவகமும் அமைக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், படகு சவாரி செய்ய மக்கள் மத்தியில் துவக்கத்தில் இருந்த ஆர்வம், சற்று குறைந்தது. ஞாயிறு மற்றும் விழாக்கால விடுமுறை நாட்களில் மட்டுமே கணிசமான அளவில் உள்ளூர்வாசிகள் வந்து சென்றனர். இந்நிலையில் தீபாவளி தொடர் விடுமுறையின்போது, சுற்றுலா பயணிகளை படகுக்குழாம் ஈர்த்தது. 5,000 பேர் இங்கு வந்து சென்றுள்ளனர். படகு குழாமுக்கு சுற்றுலா முக்கியத்துவம் ஏற்படுத்தும் முயற்சியில், சுற்றுலாத் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.ஆண்டிபாளையம் குளத்தின் முகப்பு மற்றும் குளம், அங்கு அமைக்கப்பட்டுள்ள கட்டமைப்புகளை, பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்து, கையேடாக தயாரித்தும், சுற்றுலா இணைய தளம் வாயிலாகவும் வெளியிட்டும், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
---
படகுக் குழாமுடன் கூடிய, ஆண்டிபாளையம் குளத்தின் ரம்மியமான தோற்றம்.
படகு இல்ல அலுவலக மேல் தளத்தில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி உணவகம்.

