/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி அரசு துறை அதிகாரிகள் ஆய்வு
/
திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி அரசு துறை அதிகாரிகள் ஆய்வு
திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி அரசு துறை அதிகாரிகள் ஆய்வு
திருமூர்த்தி அணையில் மீண்டும் படகு சவாரி அரசு துறை அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜன 08, 2026 05:53 AM

உடுமலை: உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில், மீண்டும் படகு சவாரியை செயல்படுத்துவது குறித்து, சுற்றுலாத்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமான சுற்றுலாத்தலமாக திருமூர்த்தி மலை உள்ளது.திருமூர்த்தி மலை சுற்றுலா மையத்தில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், மலைமேல் பஞ்சலிங்க அருவி மற்றும் திருமூர்த்தி அணை என சுற்றுலா அம்சங்களை காண, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகின்றனர்.
சுற்றுலா பயணியர் வசதிக்காக, திருமூர்த்தி அணைப்பகுதியில் செயல்பட்டு வந்த படகு இல்லம், கடந்த, 20 ஆண்டுகளுக்கு மேலாக, இயங்காமல் முடங்கியுள்ளது. படகு சவாரியை மீண்டும் துவக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என சுற்றுலா பயணியர் வலியுறுத்தி வருகின்றனர்.
இங்குள்ள படகு இல்லம் மீண்டும் செயல்படுத்துவது குறித்து, மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த்குமார், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மண்டல மேலாளர் யுவராஜ், நீர்வளத்துறை செயற்பொறியாளர் பிரபாகரன், உதவி செயற்பொறியாளர் ஆதிசிவன், உதவி பொறியாளர் ராமச்சந்திரன், தளி பேரூராட்சி செயல் அலுவலர் ஜீவா, பேரூராட்சி துணைத் தலைவர் செல்வம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அதன்பின், பி.ஏ.பி., ஆய்வு மாளிகையில், அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், துறை சார்ந்த அதிகாரிகளிடம் பெறவேண்டிய அனுமதிகள், படகு இல்லத்தின் வாயிலாக கிடைக்கும் வருவாயில், வருவாய் பகிர்வு மேற்கொள்ளுதல், படகு இல்ல செயல்பாட்டில் திருமூர்த்தி மலை பகுதியில் உள்ள மலைவாழ் மக்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்நிலையில், திருமூர்த்தி மலை பகுதியில் படகு இல்லத்தை மீண்டும் செயல்படுத்துவதற்கு, ரூ. 80 லட்சத்தில் திட்ட மதிப்பீடு தயாரித்து, மாவட்ட கலெக்டர் வாயிலாக, சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆய்வின் போது, சுற்றுலாத்துறை உதவி செயற்பொறியாளர் குணசேகரன், திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சுற்றுலா ஆர்வலர்கள் நாகராஜ், சத்யம் பாபு, பிரசாந்த் ஆகியோர் உடனிருந்தனர்.

