/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அணையில் படகு சவாரி முடக்கம்: அதிகாரிகள் கண்துடைப்பு ஆய்வு
/
அணையில் படகு சவாரி முடக்கம்: அதிகாரிகள் கண்துடைப்பு ஆய்வு
அணையில் படகு சவாரி முடக்கம்: அதிகாரிகள் கண்துடைப்பு ஆய்வு
அணையில் படகு சவாரி முடக்கம்: அதிகாரிகள் கண்துடைப்பு ஆய்வு
ADDED : நவ 07, 2025 08:59 PM
உடுமலை: அதிகாரிகள் பல முறை ஆய்வு செய்தும், திருமூர்த்தி அணையில் முடங்கிய படகு சவாரியை, மீண்டும் இயக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், சுற்றுலா பயணியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.
உடுமலை அருகேயுள்ள திருமூர்த்திமலை சுற்றுலாத்தலமாக உள்ளது. இப்பகுதிக்கு சுற்றுலா வருவோர், திருமூர்த்தி அணையின் அழகை கண்டு ரசிக்கும் வகையில், தளி பேரூராட்சி சார்பில், 1990ல் படகு சவாரி துவக்கப்பட்டது.
பின்னர், கடந்த, 2002ல், மகளிர் சுய உதவிக் குழுக்களிடம் படகுகள் இயக்கம் மற்றும் பராமரிப்பு ஒப்படைக்கப்பட்டது.
அதன்படி, படகுத்துறையில், ஐந்து படகுகள் இயக்கப்பட்டு, பெரியவர்களுக்கு, 25 ரூபாய், சிறியவர்களுக்கு, 15 ரூபாய், நான்கு நபர் பயணிக்கும் கால்மிதி படகில் செல்ல அரைமணி நேரத்துக்கு, 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்பட்டது.
பல்வேறு காரணங்களால், படகு சவாரி பல ஆண்டுகளாக முடங்கியுள்ளது. இதனால், அப்பகுதிக்கு சுற்றுலா வருவோர் படகு சவாரி செய்ய முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கின்றனர்.
படிப்படியாக சுற்றுலா சார்ந்த வர்த்தகமும், அப்பகுதியில் முற்றிலுமாக குறைந்து, விடுமுறை நாட்களில், கூட திருமூர்த்தி அணைப்பகுதி வெறிச்சோடுகிறது.
இயக்கப்படாமல் ஓரங்கட்டப்பட்ட, படகுகளும் பயன்படுத்த முடியாத நிலையில், பரிதாப நிலைக்கு மாறியுள்ளது.
மாவட்ட சுற்றுலாத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறையினர், திருமூர்த்திமலை சுற்றுலா மேம்பாட்டுக்காக ஆய்வு நடத்தியும், படகு சவாரி குறித்து கண்டுகொள்ளவில்லை.
கண்துடைப்பாக ஒவ்வொரு முறையும் படகுகள் இயக்கப்படும் என தெரிவிக்கின்றனர். இதனால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்தில் உள்ளனர்.
தளி பேரூராட்சி, பொதுப்பணித்துறை, சுற்றுலாத்துறை, மகளிர் சுயஉதவிக்குழுவினர் ஆகியோரை ஒருங்கிணைத்து, விரைவில் படகு சவாரியை துவக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

