/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உயிருக்கு உலை வைக்கும் பாட்டில் குடிநீர்; எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையம்
/
உயிருக்கு உலை வைக்கும் பாட்டில் குடிநீர்; எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையம்
உயிருக்கு உலை வைக்கும் பாட்டில் குடிநீர்; எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையம்
உயிருக்கு உலை வைக்கும் பாட்டில் குடிநீர்; எச்சரிக்கிறது தர நிர்ணய ஆணையம்
ADDED : மார் 26, 2025 11:32 PM

'பாலிதீன் பைகள், மண் வளத்துக்கு கேடு' என்பது அனைவரும் அறிந்ததே; இருப்பினும், அதை முழுவதுமாக கட்டுப்படுத்த முடியாத அவலம் தொடர்கிறது. 'தினசரி மக்கள் பயன்படுத்தும் பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் கூட, ஆபத்துக்கு அதிக வாய்ப்புள்ள உணவுகள் பட்டியலில் இணைந்துள்ளது' என்ற அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டிருக்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.
வெவ்வேறு நிறுவனங்களின் குடிநீர் பாட்டில் மாதிரிகளை ஆய்வு செய்திருக்கிறது, தர நிர்ணய ஆணையம். இதில், கண்ணுக்கு தெரியாத, 2.40 லட்சம் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இவை 'செரிமானப்பாதை, நுரையீரல் திசுக்கள் வழியாக சென்று, ரத்த ஓட்டத்தில் நுழைந்து, பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது' என்ற அபாய எச்சரிக்கையை விட்டிருக்கிறது, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம்.
உயிருக்கு உலை வைக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்த்து, கண்ணாடி பாட்டில், துருப்பிடிக்காத ஸ்டீல் பாட்டில், மூங்கில் பாட்டில் உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவிலான இந்த பிரச்னை, ஒவ்வொரு மாவட்டம், நகரம், வீதி, தெருவில் உள்ள மக்களையும் பாதிக்கும் என்பதே, யதார்த்தம்.
பல்வேறு மாநில, மாவட்ட மக்கள் வசிக்கும் திருப்பூரிலும், பாலிதீன் புழக்கம் என்பது, கட்டுக்கடங்காமல் உள்ளது. அதேபால், பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீரை பயன்படுத்துவது என்பதும், மக்களின் வழக்கமாகிவிட்டது. பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாட்டில்கள்கள், கால்வாய்களில் வீசியெறிவதால், ஆங்காங்கே அவை குவிந்துக்கிடக்கின்றன.
பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் புழக்கம் என்பதும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் உடல்நலன் சார்ந்த பாதிப்புகளை சரி செய்வது என்பதும், மிகப்பெரும் சவால் நிறைந்த பணியாக மாறியிருக்கிறது. இதனால், 'கேன்சர்' உள்ளிட்ட உயிர்கொல்லும் நோய்களுக்கு, மக்கள் ஆளாகின்றனர். வீதி, தெருக்கள் தோறும் புதிது, புதிதாக மருத்துவமனைகளும் முளைக்கின்றன. எனவே, பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் தவிர்ப்பு என்பதை, ஒரு இயக்கமாக நடத்தினால் மட்டுமே, அவற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.